2021 டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்த தமிழக வீரர் நிச்சயம் விளையாடி இருக்க வேண்டும் – ரவி சாஸ்திரி

0
104
Ravi Shastri about T20 Worldcup 2021

நேற்று இரவு நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் லக்னோ அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெறும் இரண்டாவது தோல்வி இதுவாகும்.

தொடர்ச்சியாக இரண்டு போட்டியில் தோல்வியடைந்த போதிலும் நேற்றைய போட்டியில் அந்த அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் ஆறுதலாக அமைந்த விஷயம் தங்கராசு நடராஜனின் பந்துவீச்சு தான். முதல் போட்டியில் 40 ரன்களுக்கு மேல் கொடுத்த அவர் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் மிக சிறப்பாக பந்து வீசினார்.

- Advertisement -

4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி 26 ரன்கள் மட்டுமே அவர் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் ஆல்ரவுண்டர் வீரர் குருனால் பாண்டியா ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

உலக கோப்பை டி20 தொடரில் நடராஜன் இருந்திருக்க வேண்டும்

இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தற்போது நடராஜன் குறித்து ஒரு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.”2020-2021 இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தங்கராசு நடராஜன் மிக சிறப்பாக செயல்பட்டார். அவர் பங்கேற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதேபோல முதல் டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

அவரிடம் யார்க்கர் பந்துகளை துல்லியமாக வீசும் திறமை நிறைய இருக்கிறது. பந்தை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அதை எந்த வேகத்தில் பயன்படுத்த வேண்டும் என்கிற கூடுதல் யுக்தி அவரிடம் இருக்கிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் யார்க்கர் பந்துகளை வீசி மாயாஜாலங்களை செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர். டெத் ஓவர்களில் அவருடைய பங்களிப்பு நிச்சயமாக அணியின் வெற்றிக்கு பயன்படும்.

- Advertisement -
உலக கோப்பை தொடரில் அவர் விளையாடி இருந்திருக்க வேண்டும்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நடராஜன் விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டது. அதன் காரணமாகவே அவர் உலக கோப்பை டி20 தொடரில் இடம் பெறவில்லை. கடந்த ஆண்டு நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு கூட தகுதி பெறவில்லை. அந்த உலகக் கோப்பை டி20 தொடரில் நடராஜன் விளையாடி இருந்திருக்கவேண்டும் நிச்சயமாக அவர் இந்திய அணிக்கு மிகப்பெரிய உதவி புரிந்திருப்பார் என்று தற்பொழுது ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள ஐதராபாத் அணி வருகிற 9-ஆம் தேதி சனிக்கிழமை மதியம் மூன்று முப்பது மணி அளவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதனுடைய மூன்றாவது போட்டியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.