டெல்லிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் அதிரடி காட்டிய தமிழக வீரர் ஷாருக்கான் – நூலிழையில் இரட்டைச் சதம் தவறியது

0
89
Shahrukh Khan 194 Ranji Trophy

இந்த வருடத்திற்கான இரஞ்சி டிராபி தொடர் கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது. லீக் சுற்று போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் குரூப் ஹச் பிரிவில் தமிழ்நாடு மற்றும் டெல்லி அணிகள் தற்போது விளையாடிக் கொண்டிருக்கின்றன. முதலில் பேட்டிங் விளையாடிய டெல்லி அணி 10 விக்கெட் இழப்பிற்கு 452 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக லலித் யாதவ் 177 ரன்களும் மற்றும் யாஷ் துல் 113 ரன்களும் குவித்தனர்.

பின்னர் விளையாடிய தமிழக அணி 10 விக்கெட் இழப்பிற்கு 494 ரன்கள் குவித்தது. தமிழக அணியில் அதிகபட்சமாக ஷாருக்கான் 194 ரன்கள் பாபா இந்திரஜித் 117 ரன்கள் குவித்தனர்.

சரவெடியாக வெடித்த தமிழக வீரர் ஷாருக்கான்

தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டர் வீரர் ஷாருக்கான் கடந்த ஆண்டு மிக அற்புதமாக டொமஸ்டிக் லெவல் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடினார். அதே அதிரடியை அவர் இந்த வருட துவக்கத்திலும் தன்னுடைய ஸ்டைலிலேயே தொடங்கியுள்ளார்.

நேற்றைய போட்டியில் 148 பந்துகளில் 10 சிக்ஸர் மற்றும் 20 பவுண்டரி உட்பட 194 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நேற்றைய போட்டியில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் விகிதம் 131.08 என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் 54 ஓவர் முடிவில் தமிழக அணி 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் இந்திரஜித் உடன் கைகோர்த்து ஷாருக்கான் தன்னுடைய அதிரடி காட்டினார். ஒரு பக்கம் இந்திரஜித் பொறுமையாக விளையாட மறுபக்கம் ஷாருக்கான் அதிரடியாக விளையாட தமிழக அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

நன்றாக விளையாடி கொண்டிருந்த இந்திரஜித் 74 வது ஓவரில் ஆட்டமிழக்க, இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 292 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் ஜெகதீசன் உடன் இணைந்து ஷாருக்கான் ரன் வேட்டையில் ஈடுபட்டனர். 296 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்த தமிழக அணி இவரது அதிரடி காரணமாக 7 விக்கெட் இழப்பிற்கு ( ஷாருக்கான் உடைய விக்கெட் ) 474 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

42 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கியுள்ள டெல்லி அணி தற்பொழுது நிதானமாக விளையாடி வருகிறது. 18 ஓவர் முடிவில் எந்தவித விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் அந்த அணி குவித்து, தமிழக அணியை விட 9 ரன்கள் முன்னிலையில் அந்த அணி விளையாடி வருகிறது.