“8 கோடி எனக்கு கொடுக்குறாங்க, ஆனாலும் நான் ஏன் 2023 ஐபிஎல் ஆடலைன்னா..” – பாட் கம்மின்ஸ் பேட்டி!

0
2215

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஏன் கலந்து கொள்ளவில்லை?என்று பேட்டியளித்துள்ளார் பேட் கம்மின்ஸ்.

கொல்கத்தா அணிக்காக 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் க்கு முன்பு நடைபெற்ற ஏலத்தில் சுமார் 7.25 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்டார் பேட் கம்மின்ஸ். கொல்கத்தா அணியின் மிக முக்கிய ஆல்ரவுண்டராகவும் இவர் இருக்கிறார்.

கடந்த ஆண்டு மும்பைக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி வெற்றியும் பெற்றுக் கொடுத்து எடுக்கப்பட்ட பணத்திற்கு நியாயம் சேர்த்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாக இருந்து வரும் இவர், சமீபத்தில் ஆரோன் பின்ச் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, புதிய ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

உலக கோப்பை டி20 தொடர் முடிவுற்ற பிறகு ஆஸ்திரேலியாவில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகளும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடுகிறது. நவம்பர் 17ஆம் தேதி இத்தொடர் துவங்குகிறது.

இது முடிந்த பிறகு அடுத்த சில மாதங்களில் ஆஷஸ் தொடர் மற்றும் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான கிரிக்கெட் தொடர் என வரிசையாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவிற்கு இருக்கின்றன.

டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் என இரண்டுக்கும் பேட் கம்மின்ஸ் கேப்டனாக இருப்பதால் அவருக்கு சர்வதேச வேலைப்பளு அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான் ஐபிஎல் போட்டிகளில் என்னால் பங்கேற்க முடியவில்லை என அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இது பற்றி அவர் பேசியதாவது: “எனக்கு ஐபிஎல் போட்டியில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் பல அனுபவங்களையும் தருகிறது. உலகதரம் மிக்க வீரர்கள் அங்கு இருக்கிறார்கள்.

ஆனால் துரதிஷ்டவசமாக சர்வதேச போட்டிகள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாகவே இருக்கிறது. உடல் அளவிலும் என்னை நான் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டு வித போட்டிகளுக்கு கேப்டனாக இருக்கிறேன். கூடுதல் பொறுப்பும் இருக்கிறது. ஆகையால் தான் இந்த கடினமான முடிவை நான் எடுத்திருக்கிறேன்

.ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் தொடர்ச்சியாக 6 டெஸ்ட் போட்டிகள் இருக்கின்றன. டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பது எங்களுக்கு இன்றியமையாதது. அதனை கருத்தில் கொண்டு தான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடினால் முழு உடல்தகுதியுடன் இருப்பது கடினம் என்கிற அடிப்படையில் கலந்துகொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்தேன்.” என பதிவு செய்தார்.