ரிஸ்வான் கையைக் கட்டிப் போடுங்க; முத்தரப்பு டி20 தொடரில் பங்களாதேசை வீழ்த்தியது பாகிஸ்தான்!

0
164
PCB

நியூசிலாந்து பங்களாதேஷ் பாகிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நியூஸிலாந்து நாட்டில் நடக்கிறது. கிரிக்கெட் உலகில் முத்தரப்பு தொடர்கள் அருகிப்போயிருந்த நிலையில் அதிசயமாக இந்த மூன்று நாடுகள் மோதும் முத்தரப்பு தொடர் நடக்கிறது!

இந்த முத்தரப்பு தொடரில் இன்று கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பங்களாதேஷ் அணியின் கேப்டன் நூருல் ஹசன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணிக்கு துவக்கம் தர பாபர் ரிஸ்வான் களம் இறங்கினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தது. பாபர் 25 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்கு அடுத்து களமிறங்கிய ஷான் மசூத் 22 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்கடுத்து பாகிஸ்தானின் மிடில் வரிசை வழக்கம்போல் சொதப்பியது. ஹைதர் அலி, இப்திகார் அகமத், ஆசிப் அலி ஆகியோர் வரிசையாக வெளியேறினார்கள்.

ஆனால் வழக்கம்போல் காலத்தில் ஒரு முனையில் நின்ற முகமது ரிஸ்வான் இந்த ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணியை கரை சேர்த்தார். 50 பந்துகளைச் சந்தித்த அவர் 72 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடக்கம். பங்களாதேஷ் அணி தரப்பில் பந்துவீச்சில் டஸ்கின் அகமத் 4 ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு லிட்டன் தாஸ் 35, அபிப் ஹோசைன் 25 மற்றும் யாசிர் அலி 42 ஆகியோர் மட்டுமே ஒரு சராசரி பங்களிப்பைத் தர, இணைக்கப்பட்ட 20 ஓவர்களில் பங்களாதேஷ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. பாகிஸ்தான் அணி தரப்பில் பந்துவீச்சில் முகமது வாசிம் 4 ஓவர்கள் பந்துவீசி 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்த போதும், அந்த அணியால் 180 ரன்களை தொடர்ச்சியாக நெருங்க முடியவில்லை. மேலும் அவர்களின் நடுவரிசை பேட்டிங் மிக மோசமாக இருப்பது தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!