“பாபர் ஆஸம் பெரிய மனது வைத்தால் தான் இது நடக்கும்” – முகமது ஹபீஸ் பரபரப்பு கோரிக்கை!

0
380
Mohammed Hafeez

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா பாகிஸ்தான் அணிகளை மையப்படுத்தியே சுழன்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஞாயிற்றுக் கிழமையும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும்படி அவர்கள் இடம்பெற்ற குழுவும், போட்டி தேதியும் அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது நடந்து வரும் சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடினால் இவர்கள் இருவரும் இறுதிப் போட்டியிலும் இன்னொரு முறை மோத வேண்டியதாய் வரலாம்!

இந்த ஆசியக் கோப்பை போட்டி இந்தியா பாகிஸ்தான் அணிகளை மையப்படுத்தி சுழல்வதைப் போலவே, வீரர்களின் காயத்துடனும் சுழல்கிறது. தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இந்தியா பாகிஸ்தான் இலங்கை மூன்று நாடுகளின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தால் அணியில் இடம்பெறவில்லை. தொடரில் இடம் பெற்று தற்போது காயத்தால் ரவீந்திர ஜடேஜா வெளியேறி இருக்கிறார். மேலும் பாகிஸ்தான் அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தஹானி இன்று நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் உடல் பக்கவாட்டு காயத்தால் இடம்பெறவில்லை. இப்படி இந்தத் தொடர் திருப்பங்களோடு போய்க்கொண்டிருக்கிறது.

- Advertisement -

ஆசியக் கோப்பையில் முதல் சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கடந்த ஆண்டு இங்கு நடந்த டி20 உலக கோப்பையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு சிறிய ஒரு ஆசுவாசத்தை தற்பொழுது பெற்றிருக்கிறது. ஆனால் இது நிரந்தரமானது இல்லை. இனி வரும் போட்டிகள் மிகவும் முக்கியமானது.

பாகிஸ்தான் அணியை எடுத்துப்பார்த்தால் அந்த அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள்தான் அந்த அணியின் முதுகெலும்பு. குறிப்பாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம். ஆனால் அவர் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகளுடன் 10, 9 ரன்களையே எடுத்தார். இதில் இந்தியாவுடனான போட்டியில் அவர் வெளியேறவும், மற்றவர்களால் நின்று பெரிய ரன்னை கொண்டு வரமுடியவில்லை.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் பாகிஸ்தான் பேட்டிங் வரிசையில் மாற்றங்கள் வரவேண்டும் என்று பேசியிருக்கிறார். 2021 வருடம் டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த ஜோடியாக பாபர் மற்றும் ரிஸ்வான் ஜோடி இருக்கிறது. இந்த நிலையில் முகமது ஹபீஸின் இந்தக் கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதுபற்றி முகமது ஹபீஸ் கூறும்பொழுது ” இது பற்றிய விவாதம் சில காலமாக நடந்து வருகிறது. அவர்களது வெற்றி விகிதத்தை பார்த்தால், இந்த விவாதத்தை வருகின்ற உலகக்கோப்பை வரை நிறுத்தி வைக்க வேண்டும். அவர்கள் விளையாடட்டும், அவர்கள் மேம்படுத்த வேண்டியது அவர்களில் ஸ்ட்ரைக் ரேட் மற்றும் நோக்கத்தை மாற்ற வேண்டும். பகர் ஜமான் ஓபனர் ஆக வரவேண்டும் என்று நான் விரும்பினாலும், பாபர் ஒரு கேப்டனாக பெரிய மனதை காட்டினால்தான் அது நடக்கும்” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இந்த முடிவை எடுப்பதால் எந்தத் தீங்கும் கிடையாது ஆனால் இந்த முடிவை பாபர்தான் எடுக்க வேண்டும். நீங்களும் நானும் இந்த முடிவை எடுக்க முடியாது. பாபர் – ரிஸ்வான் ஜோடி சேர்ந்து விளையாடி வெற்றி பெற்றதை நான் பார்க்கிறேன். எனவே அவர்கள் செய்ய வேண்டியது ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்தவேண்டும் மற்றும் நோக்கத்தை மாற்றவேண்டும்” என்று வலியுறுத்தி கூறினார்!