“இந்த தமிழக வீரர் இந்திய அணிக்கு சீக்கிரத்தில் விளையாடப் போகிறார்” – சதம் அடித்த தமிழக வீரருக்கு தினேஷ் கார்த்திக் வாழ்த்து ட்வீட்!

0
2026
DK

தற்போது உள்நாட்டு டெஸ்ட் தொடரான துலீப் டிராபி தொடர் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒரு போட்டியில் தற்போது தமிழக கோயம்புத்தூரில் மேற்கு மண்டல அணியும் தெற்கு மண்டல அணியும் மோதி வருகின்றன.

இதில் முதலில் பேட் செய்த மேற்கு மண்டல அணி 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த அணியில் அஜின்கியா ரகானே, ஸ்ரேயாஸ் அய்யர், ஜெய்ஸ்வால், ஜெயதேவ் உடன்கட் போன்ற பிரபல வீரர்கள் இருக்கிறார்கள். இந்த பிரபல இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் இந்த போட்டியில் பெரிய ரன்களுக்கு போகவில்லை. தெற்கு மண்டல அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரரான சாய் கிஷோர் 5 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையடுத்து பேட் செய்து வரும் தெற்கு மண்டல அணியில் தமிழக வீரரான பாபா இந்திரஜித் 125 பந்துகளில் 118 ரன்கள் குவித்து மிரட்டினார். டெஸ்ட் போட்டியை ஒருநாள் போட்டி போல அணுகிய அவரின் பேட்டிங் அணுகுமுறையால் முக்கியமான ஆட்டத்தில் தெற்கு மண்டல அணி மேற்கு மண்டல அணியை விட முன்னிலை பெற்றுள்ளது.

தற்போது பாபா இந்திரஜித்தின் இந்த அபார சதம் குறித்து தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்திட்டு உள்ளார். அதில் அவர் ” மிகவும் தீவிரமான ஒரு துலீப் டிராபி இறுதிப் போட்டியில் ஒரு முக்கியமான வீரரிடம் இருந்து அபார சதம் வந்திருக்கிறது. இந்திய அணிக்கான அழைப்பில் அவர் முன்னணியில் இருக்கிறார் ” என்று தெரிவித்து இருக்கிறார்.

பாபா இந்திரஜித் இதுவரை 57 முதல் தர போட்டிகளில் விளையாடி 52.94 சராசரியில் 3865 ரன்களை குவித்துள்ளார். குறிப்பாக அவர் 2016 ஆம் ஆண்டு முதல் 33 ஆட்டங்களில் 66 சராசரியில் 2512 ரன்களை குவித்துள்ளார். இந்த வருட காலத்தில் முதல் தர போட்டியில் எந்த ஒரு இந்திய வீரரும் இந்த பெரிய சராசரியை கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த வருட ரஞ்சிப் போட்டியில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் இந்திரஜித் முதல் 10 இடங்களில் இல்லைதான். ஆனால் அவர் விளையாடியது மூன்றே போட்டிகள் மட்டும்தான். அதில் அவர் இரண்டு சதங்களுடன் 396 ரன்கள் குவித்து இருந்தார். தொடர்ந்து பேட்டிங்கில் சிவப்பு பந்தில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த போதும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் வராமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. சீக்கிரத்தில் அவருக்கான வாய்ப்பு இந்திய அணியில் அமையட்டும்.