இந்திய அணியின் எக்ஸ் ஃபேக்டர் இவர்தான்; விராட் கோலி இல்லை- ரோகித் சர்மா பரபரப்புப் பேச்சு!

0
3027
Rohitsharma

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 22ஆம் தேதி துவங்க இருக்கும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் காய்ச்சல் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தொற்றிக் கொண்டுள்ளது!

நாளை முதல் அக்டோபர் 21ஆம் தேதி வரை தகுதி சுற்று போட்டிகள் 8 அணிகளை 2 குழுக்களாகப் பிரித்து நடத்தப்பட இருக்கிறது. இந்த இரண்டு குழுவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் பிரதான சுற்றுக்குத் தகுதி பெறும்.

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் மேற்கு ஆஸ்திரேலிய அணியுடன் இரண்டு பயிற்சி ஆட்டங்களை முடித்துக்கொண்டு இந்திய அணி, 17 மற்றும் 19 தேதிகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணியுடன் பயிற்சி போட்டிகளில் விளையாட தற்போது பிரிஸ்பேனுக்கு வந்திருக்கிறது.

இதற்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பத்திரிக்கையாளர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். இதன் மூலம் இந்திய அணி குறித்து நிலவி வந்த சந்தேகங்கள் பலவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் மிக முக்கியமான பேட்ஸ்மேனாக அதாவது எக்ஸ் பேக்டர் பேட்ஸ்மேனாக யார் இருப்பார் என்று ரோகித் சர்மா கருத்து கூறியுள்ளார்.

இது பற்றி அவர் கூறும் பொழுது “சூரியகுமார் யாதவ் நல்ல பேட்டிங் பார்மில் இருக்கிறார். அவர் தொடர்ந்து இதே முறையில் சிறப்பாக பேட் செய்வார் என்று நம்புகிறேன். அவர் ஒரு நம்பிக்கையான வீரர் அச்சமின்றி தைரியமாக விளையாடக் கூடியவர். அவர் தனது திறமையை மிகச்சரியாக பயன்படுத்தி விளையாடுகிறார். எனவே இந்திய அணியின் எக்ஸ் ஃபேக்டர் பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் இருப்பார் ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா
” பாகிஸ்தான் அணியுடன் விளையாடும் போட்டி முக்கியமானதுதான். அதன் முக்கியத்துவம் எங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனால் அதற்காக எப்போதும் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க முடியாது. மேலும் எனக்கு கடைசி நேரத்தில் அணியை போட்டிக்காக மாற்றுவதில் நம்பிக்கை கிடையாது. பாகிஸ்தான் அணியுடன் விளையாடும் போட்டியில் எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்று அவர்களிடம் சொல்லிவிட்டோம். அந்த வீரர்கள் போட்டிக்கு தயாராகி வருகிறார்கள். முகமது சமி பிரிஸ்பேனில் எங்களுடன் பயிற்சியில் கலந்து கொள்வார் ” என்று கூறியிருக்கிறார்!