” மோசமாக ஆடினாலும் விராட் கோலி இன்னும் இந்திய அணிக்குள் இருப்பது இதனால் தான் ” உண்மையை உடைக்கும் மான்டி பனேசர்

0
132
Monty Panesar and Virat Kohli

விராட் கோலி சமிபகாலமாக மோசமாக ஆடிவந்தாலும், அவர் அணியில் தொடர்ந்து நீடிப்பதற்கு இதுதான் காரணம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் மான்டி பனேசர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் முதன்மை நட்சத்திரமாக திகழ்ந்துவரும் முன்னாள் கேப்டன் விராத் கோலி, கடந்த மூன்று வருடங்களாக சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இருப்பினும் முந்தைய காலங்களில் அவரது பேட்டிங் அசாத்தியமாக இருந்ததால் சராசரி 50க்கும் குறையாமல் இன்னும் வைத்துள்ளார். தற்போது இவரது சராசரி டெஸ்ட் போட்டிகளில் 50க்கும் கீழே வந்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக கடந்த ஒரு ஆண்டில் பத்து டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாடியுள்ளார். அதில் மூன்று போட்டிகள் இந்திய மைதானத்திலும், 7 போட்டிகள் வெளிநாட்டு மைதானத்திலும் விளையாடி உள்ளார். ஆடிய 18 இன்னிங்ஸில் 527 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் இவரது சராசரி 29.27 ஆகும். ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 50 சராசரி வைத்திருக்கும் இவர், கடந்த சில ஆண்டுகளாக மிகவும் குறைவான சராசரியில் விளையாடி வருவதால் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

கேப்டன் பொறுப்பில் இருந்ததால் இவரை அணியில் இருந்து நீக்காமல் இருந்தனர் என்று விமர்சனங்கள் வந்தாலும், கடந்த ஓராண்டாக எவ்வித கேப்டன் பொறுப்பிலும் இவர் இல்லை. எனினும் விராட் கோலி தொடர்ந்து இந்திய அணியில் நீடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியம் இல்லை என்றாலும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து இந்திய விமர்சகர்கள் பலர் கூறுகையில், “விராட் கோலி போன்ற ஒரு பலம் பொருந்திய வீரர் எந்த சமயத்திலும் மீண்டும் ஃபார்மிற்கு வந்துவிடலாம். ஆகையால் அவர் அணியில் இருப்பது வீரர்கள் மத்தியில் மனதளவில் மிகுந்த பலத்தை கொடுக்கும். எனினும் அவர் தொடர்ந்து இதே நிலையில் ஆடினால் இந்திய அணிக்கு ஆபத்தாகவும் முடியலாம்.” என்றனர்.

மேலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் மாண்டி பனேசர், விராட் கோலி இன்னும் இந்திய அணியில் இருப்பது குறித்து சில உண்மைகளையும் பேசி இருக்கிறார். அவர் கூறுகையில், “விளம்பரதாரர்கள் மத்தியில் விராட் கோலி பெயர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அவருக்கான வரவேற்பு சற்றும் குறையவில்லை. ஆகையால் தொடர்ந்து அவருக்கு பல விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இவர் மூலமாக பிசிசிஐக்கு பல விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் போன்றவை வந்து கொண்டிருக்கின்றன. விராட் கோலியை அணியில் இருந்து நீக்கி விட்டால் பிசிசிஐக்கு வருமானத்தில் பெருத்த அடி ஏற்பட்டுவிடும். இதன் காரணமாகவும் அவரை நீக்குவதற்கு பிசிசிஐ தலைமை தயங்கி வருகிறது.” என கருதுகிறேன்.

- Advertisement -

“அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் இது போன்ற சரிவு நிலை வருவது இயல்பு. அந்த சூழலில் பல முன்னணி வீரர்களிடம் ஆலோசித்து மீண்டும் தங்களது இயல்பான ஆட்டத்திற்கு வருவது ஒவ்வொரு வீரருக்கும் மற்றும் அவரது அணிக்கும் நல்லதாக அமையும். அதுபோல விராட் கோலி சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் போன்ற முன்னணி வீரர்களிடம் தனது பேட்டிங் நிலையை மாற்றுவது குறித்து ஆலோசிக்க வேண்டும்.” என்று அறிவுரையும் கூறியிருந்தார்.