நான் தோனிக்கு இவ்ளோ விஸ்வாசமா இருகேன்னா.. அதுக்கு காரணமே இதுதான் – விராட்கோலி உருக்கமான பேட்டி!

0
47

எனக்கும் தோனிக்கும் உள்ள உறவு எப்படி இவ்வளவு ஸ்பெஷல் ஆக இருக்கிறது என்று விராட் கோலி உருக்கமாக பேட்டியளித்துள்ளார்.

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொண்டன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மிகச்சிறப்பாக ஆட்டத்தை துவங்கிய இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தது. அதன்பிறகு விராட் கோலி நன்றாக விளையாட, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். அரைசதம் கடந்த விராத் கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ரன் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் அடித்திருந்தது.

இந்த மைதானத்தில் 180 ரன்கள் கடப்பது சற்று கடினம் என்றாலும் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர் ரிஸ்வான் சிறப்பாக விளையாடினார். பாபர் அசாம் 14 ரன்களுக்கு ஆட்டம் இழந்த பிறகு, அடுத்து வந்த பக்கர் ஜமான் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிஸ்வான் மற்றும் முகமது நவாஸ் இருவரும் இந்தியாவின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டனர். ஆட்டம் மெல்ல மெல்ல இந்திய அணியின் கையில் இருந்து நழுவியது. நவாஸ் 20 பந்துகளில் 42 ரன்கள் அடித்து அவுட் ஆனார். ரிஸ்வான் 71 ரன்கள் அடித்து அவுட் ஆனார். கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற ஏழு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டபோது ஆசிப் அலி ஒரு பவுண்டரி அடித்தார். அதன் பிறகு வந்த வீரர் இரண்டு ரன்கள் அடித்து பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.

இந்திய அணி தோல்வியை தழுவிய பிறகு முன்னாள் கேப்டன் விராத் கோலி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்திருந்தார். ஆசிய கோப்பைத் தொடர் துவங்குவதற்கு முன்பாக விராட் கோலி திடீரென்று தோனியின் நினைவாக சமூக வலைதளத்தில் புகைப்படத்தை அப்லோட் செய்திருந்தார். அதை வைத்து கேள்வி எழுப்பிய நிருபர்களுக்கு பதில் அளித்த விராட் கோலி கூறுகையில்,

“நான் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை விட்டு விலகிய பிறகு எனக்கு தோனி மட்டுமே மெசேஜ் செய்து பேசினார். பலரிடம் எனது தொலைபேசி எண் இருக்கிறது. ஆனால் யாரும் என்னிடம் பேசவில்லை. அப்போதுதான் தோனியின் மீது எனக்கு இருக்கும் மரியாதை மற்றும் அந்த நட்புணர்வு மிகவும் உன்னதமானது என்பதை உணர்ந்தேன். எங்கள் இருவருக்கும் இடையே எந்தவித தயக்கமும் இல்லாமல் இருப்பதற்கு இந்த உன்னதம் தான் காரணம்.

நான் எனது வாழ்க்கையை நிறைவாகவும் நேர்மையாகவும் வாழ்கிறேன். ஆகையால் இது போன்ற சின்னச் சின்ன விஷயம் கூட எனக்கு மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். இந்த தருணத்தில் நான் சிலருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மற்றொருவர் ஆட்டத்தில் குறை இருந்தால் அவரிடம் தனிப்பட்ட முறையில் சென்று கூற வேண்டும். நான் எப்போதும் அதைத்தான் செய்கிறேன். இதுதான் பிறரது வளர்ச்சிக்கு உதவும்.” என்று மறைமுகமாக யாரையோ குறிப்பிட்ட பேசினார் விராட் கோலி.