ஜடேஜா 175 ரன்னில் இருந்த போது கேப்டன் ரோஹித் ஷர்மா டிக்ளர் செய்ததற்கு இதுதான் காரணம் – ஜடேஜா பேட்டி

0
5762
Ravindra Jadeja and Rohit Sharma

டி20 தொடரை முழுவதுமாக இழந்த இலங்கை அணி அடுத்ததாத 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி மொகாலி மைதானத்தில் மார்ச் 4 அன்று தொடங்கியது. இது விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டி என்பதால் அவரை பிசிசிஐ கவுரவித்து போட்டியைத் தொடங்கியது. மேலும், கேப்டனாக ரோஹித் ஷர்மாவுக்கு முதல் டெஸ்ட் ஆகும். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

இந்திய அணியைப் பொறுத்தவரை ரோஹித் 29, அகர்வால் 33, விஹாரி 58, கோஹ்லி 45 & ஷ்ரேயாஸ் ஐயர் 27 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 96 ரன்கள் சேர்த்து நூழிலையில் தன் சதத்தைத் தவற விட்டார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 357/6 என முடித்தது. ஜடேஜா மற்றும் அஷ்வின் களத்தில் இருந்தனர்.

ஷேன் வார்னேவின் மறைவுக்கு 2 நிமிடம் அஞ்சலி செலுத்தியப் பிறகு 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. அஷ்வின் – ஜடேஜா ஜோடி நிலைத்து ஆடி இலங்கை பந்துவீச்சாளர்களை அலைய வைத்தனர். அஷ்வின் 61 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஒரு பக்கம் ஜடேஜா நிதானமாக ஆடி தன் இரண்டாவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.

இந்திய அணியின் ஸ்கோர் 450 ரன்களைத் தாண்டியும் டிக்ளர் செய்யவில்லை. ஜடேஜாவின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இலங்கை வீரர்கள் பரிதவித்தனர். ஜடேஜா பவுண்டரியும் சிக்ஸரும் விளாசி 150 ரன்களைத் தாண்டினார். நம்பர் 7வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த கபில் தேவ்வின் சாதனையை ஜடேஜா முறியடித்தார். ஜடேஜா 175 ரன்களில் இருந்த போது கேப்டன் ரோஹித் ஷர்மா இன்னிங்ஸை முடிவு செய்து கொள்வதாக தெரிவித்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 574/8 என்ற இமாலய ஸ்கோரை அடைந்தது.

இதனால் ரசிகர்கள் மிகவும் அதிருப்தி அடைந்தனர். இன்னும் சில நேரம் ஜடேஜாவை பேட்டிங் செய்ய அனுமதித்து இருந்தால் நிச்சயம் இரட்டைச் சதம் விளாசிய இருப்பார் என்று வருத்தம் தெரிவித்தனர். ஒருமுறை சச்சின் டெண்டுல்கர் 194 ரன்களில் இருந்த போது கேப்டன் ராகுல் டிராவிட் டிக்ளர் செய்தது போல் இன்றும் செய்துள்ளார் என்று சமூக வலைத்தளத்தில் பலர் பதிவிட்டனர்.

அப்போது டிக்ளர் செய்ததற்கான உண்மையான காரணத்தை ஜடேஜா பின்னர் பகிர்ந்தார். அவர் கூறியதாவது, “ இலங்கை வீரர்கள் மிகவும் சோர்வுற்று காணப்பட்டனர். பேட்டிங் செய்தது போதும் இனி அவர்களின் விக்கெட்டை வீழ்த்துவது தான் நம் வேலை ” என்றார். அதனால் இவர் தான் டிக்ளர் செய்ய அறிவுறுத்தினேன் என்று உண்மையை உடைத்தார். ஜடேஜா 200 அடிக்கக் கூடாது என்று ரோஹித் ஷர்மா எண்ணி இதைச் செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.