“நாங்கள் தோற்றதற்கு இதுதான் காரணம்” – கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்கம்!

0
1726
Hardik pandya

இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி பரபரப்பான ஆட்டத்தில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது!

இன்று தொடரின் இரண்டாவது போட்டி மகாராஷ்டிர புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால் இந்த மைதானத்தில் ஐபிஎல் வரை முதலில் பேட்டிங் செய்த அணிகளே அதிக முறை வெற்றியை பெற்று இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

முதலில் விளையாடிய இலங்கை அணிக்கு கேப்டன் சனகா அதிரடியாக 56 ரன்கள் குவித்தார். இன்னொரு புறத்தில் துவக்க ஆட்டக்காரர் குசால் மெண்டிஸ் அரை சதம் அடித்தார். நிசாங்கா மற்றும் அசலங்கா இருவரும் 30 ரன்களுக்கு மேல் அடிக்க இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில், இசான் கிசான், ஹர்திக் பாண்டியா, ராகுல் திரிபாதி யாரும் சரியான பங்களிப்பை அளிக்கவில்லை. ஆனால் சூரியகுமார் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் அதிரடியாக விளையாடி அரை சதங்கள் விளாசி இந்திய அணிக்கு மதிப்பான ஒரு ஆட்டத்தை வழங்கினார்கள். ஆனாலும் இந்திய அணியின் வெற்றிக்கு இது போதவில்லை. முடிவில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் 190 ரன்களை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் சேர்த்து தோற்றது.

போட்டிக்குப் பிறகு தோல்வி குறித்து பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா “பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கின் போது பவர் பிளேவில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. நாங்கள் சில அடிப்படை தவறுகளை செய்தோம். அதை இந்த அளவிலான சர்வதேச போட்டிகளில் செய்யக்கூடாது. அது என்னவென்று அனைவருக்கும் தெரியும். ஆட்டத்தில் நம்மால் எதையெல்லாம் கட்டுப்படுத்த முடியுமோ நாம் அதில் எல்லாம் கற்றுத் தேற வேண்டும். உங்களுக்கு நல்ல நாள் இருக்கலாம் கெட்ட நாள் இருக்கலாம் ஆனால் அடிப்படை விஷயத்தில் தவறு செய்யக் கூடாது. அர்ஸ்தீப்க்கு இந்த நிலையில் இது கடினம். ஆனால் இதற்காக அவரை நான் குறை கூற போவதில்லை. ஆனால் கிரிக்கெட்டில் எந்த வடிவத்திலும் நோபால் என்பது ஒரு குற்றம். ராகுல் திரிபாதி நம்பர் மூன்றில் விளையாடுவது வழக்கம். அணிக்குள் யாராவது புதிதாக வரும் பொழுது அவர்களுக்கு ஒரு பாத்திரத்தையும் வசதியான இடத்தையும் தருகிறோம் அந்த வகையில்தான் இவருக்கு இந்த இடத்தை தந்தோம்” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -

டாஸ் நிகழ்வின்போது ஹர்திக் பாண்டியாவிடம் இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் தேர்வு செய்தவர்கள்தான் அதிக முறை வென்று இருக்கிறார்கள் என்று கேட்ட பொழுது, அதற்கு அவர் “ஓ அப்படியா அது எனக்கு தெரியாது!” என்று கூறியிருந்தார். அவரது இந்த முடிவுதான் இந்த போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமா என்று தற்போது சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது!