எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம் – பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் வேதனை!

0
1488
Babarazam

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை தொடரில் இன்று மற்றும் ஒரு பரபரப்பான போட்டி பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடந்து முடிந்திருக்கிறது.

இந்தப் பரபரப்பான போட்டியில் வேகப் பந்துவீச்சில் பலமாக இருக்கும் பாகிஸ்தான் அணியை, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் வைத்து, ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றியைப் பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று தைரியமாக பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் இந்திய போட்டியில் விளையாடாத வேகப்பந்துவீச்சாளர் முகமது வாசிம் நான்கு ஓவர்கள் பந்து வீசி 24 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு, டி20 கிரிக்கெட்டில் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் துவக்க ஜோடி ரிஸ்வான் மற்றும் பாபர் ஏமாற்றம் அளித்தனர். அதற்கு அடுத்து வந்த இப்திகார் மற்றும் ஹைதர் அலி எல்லோரும் ஏமாற்றம் அளித்தார்கள்.

ஒரு முனையில் நின்று விளையாடிய இடது கை ஆட்டக்காரர் ஷான் மசூத் மட்டும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் விளையாடினார். அவர் 38 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்குப் பிறகு முகமது நவாஸ் கொஞ்சம் நின்று ஆட்டத்தின் கடைசி ஓவருக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தார். ஆனால் அந்த ஓவரில் பாகிஸ்தான் அணியால் ஒன்பது ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஆச்சரியப்படும்படியாகவும் அதிர்ச்சி அளிக்கும் விதமாகவும் பாகிஸ்தான் அணியை இந்த உலகக் கோப்பை தொடரில் ஒரு ரன் வித்தியாசத்தில் சிறிய அணியான ஜிம்பாப்வே அணி வீழ்த்தியது.

இந்தப் போட்டியின் முடிவுக்கு பின் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் ” எங்கள் அணிக்கு இது மிகவும் ஏமாற்றமான ஆட்டம். நாங்கள் பேட்டிங்கில் நல்ல முறையில் செயல்படவில்லை. முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் மிக மோசமாக இருந்தோம். பின்பு ஷான் மற்றும் சதாப் இருவரும் இணைந்து ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்கள். துரதிஷ்டவசமாக சதாப் ஆட்டம் இழந்ததும், அடுத்தடுத்து விக்கட்டுகள் விழ எங்கள் மீது அழுத்தம் அதிகரித்தது. நாங்கள் புதிய பந்தில் ஆறு ஓவர்களில் சிறப்பாக செயல்படவில்லை. ஆனாலும் பின்னர் நாங்கள் சுதாரித்து நன்றாகவே முடித்தோம். ஆனால் பேட்டிங்கில் சரியாக செயல்படாது போனது தோல்விக்கு வழி வகுத்து விட்டது. நாங்கள் ஒன்றாக அமர்ந்து பேசி எங்கள் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு வலிமையாக அடுத்த போட்டிக்கு திரும்புவோம்” என்று கூறியிருக்கிறார்.