தோல்விக்கு இதான் காரணம் ; அஷ்வினை இதனால்தான் முன்கூட்டியே வீசவைத்தேன் ; ரோகித் சர்மா விளக்கம்!

0
1523
Rohitsharma

உலகின் அதிவேகமான ஆடுகளத்தைக் கொண்ட ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில், எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று தென் ஆப்பிரிக்கா இந்திய அணிகள் முக்கியமான ஆட்டம் ஒன்றில் மோதிக்கொண்டன!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் தவிர எந்த பேட்ஸ்மேன்களும் சரியாக விளையாடவில்லை. சூரியகுமார் யாதவ் 40 பந்துகளில் 68 ரண்களை ஆறு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸ்ர்களுடன் விளாசினார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி நிகிடி நான்கு ஓவர்கள் பந்து வீசி 29 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணிக்கு இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் கடும் சவாலை அளித்தார்கள். இந்திய அணியினரின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. இதனால் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களின் கடும் உழைப்பு வீணாகிப்போனது. தென் ஆப்பிரிக்க அணி கடைசி ஓவரில் மூன்று பந்துகள் மீதம் இருக்க வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ” இங்கு நிலவிய வானிலையால் ஏதாவது பேட்டிங் செய்ய சாதகம் கிடைக்கும் என்று நாங்கள் நினைத்தோம். வேகப் பந்துவீச்சாளர்களுக்கு இங்கு சாதகமாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். அதனால்தான் 130 ரன்களை துரத்துவது கூட மிகவும் கடினமாக இருந்ததை நீங்கள் பார்த்தீர்கள். நாங்கள் நன்றாகவே போராடினோம் ஆனால் எங்களை விட தென்னாபிரிக்க அணி மிகச் சிறப்பாக விளையாடிவிட்டது. இங்கு வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் விக்கெட் வரலாம் என்ற நிலை தான் இருந்தது. மில்லர் மற்றும் மார்க்கம் இணைந்து வெற்றிக்கான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்கள். ஆனால் நாங்கள் பீல்டிங்கில் களத்தில் சிறப்பாக செயல்படவில்லை நானும் உள்பட. நாங்கள் இப்படியான சூழல்களில் விளையாடி இருக்கிறோம் எனவே கண்டிஷன் மீது சாக்கு சொல்ல விரும்பவில்லை ” என்று கூறினார்.

இறுதி நேரத்தில் அஸ்வினுக்கு முன்கூட்டியே ஓவர் தந்தது ஏனென்று ரோகித் சர்மா தெரிவிக்கும் பொழுது
” இந்தத் தொடரில் சுழற் பந்து வீச்சாளர்கள் கடைசியில் பந்துவீசும் போது என்ன நடந்தது என்று நான் பார்த்திருக்கிறேன். அதனால் முன்கூட்டியே அஸ்வினை வீச வைத்தேன். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்களின் இடத்தில் பந்து வீசுவதை நான் பார்க்க விருப்பப்பட்டேன். மேலும் அஸ்வின் வீசும் பொழுது புதிய பேட்ஸ்மேன் களத்திற்கு வந்திருந்தது சரியான நேரம் அவர் பந்து வீசுவதற்கு ” என்று தெரிவித்தார்!