“இது பழைய பாகிஸ்தான் டீம் மாதிரி கூட இல்ல.. கிளம்ப வேண்டியதுதான்!” – கங்குலி கடுமையான தாக்கு!

0
614
Ganguly

நடப்பு உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெறுகின்ற காரணத்தினால் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த ஒரு போட்டி பல போட்டிகள் கொண்டு வந்து கொடுக்கக்கூடிய வருமானத்தை தரக்கூடியதாகவும் அமைந்திருந்தது. இப்படி எல்லா வகையிலும் உச்சத்தில் இருந்ததால், போட்டி குறித்த எதிர்பார்ப்பும் உற்சாகமும் கரைபுரண்டு ஓடியது.

- Advertisement -

இப்படிப்பட்ட ஒரு போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானத்தில் 1.30 லட்சம் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்றதால், மிகச் சிறப்பான ஒரு தருணமாகவும் மாறி இருந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தானை 155 ரன்கள் இரண்டு விக்கெட் என்கின்ற நிலையில் இருந்து, மேற்கொண்டு 36 ரன்கள் மட்டுமே சேர்த்து, 191 ரன்கள் ஆல்அவுட் ஆகி, அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது.

இந்திய அணி வெற்றி பெற்றது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது என்றாலும் கூட, இவர்களுக்கே போட்டி ஒரு தலைப்பட்சமாக முடிந்ததில் கொஞ்சம் உடன்பாடு இல்லைதான். இதே மனநிலைதான் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களிடமும் இருக்கிறது.

- Advertisement -

உலகக்கோப்பைக்கு முன்பாகவே இந்தியா பாகிஸ்தான் போட்டி பெரிது கிடையாது, இந்தியா ஆஸ்திரேலியா போட்டியே பெரியது, ஏனென்றால் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்தியா எப்பொழுதும் ஒருதலைப்பட்சமாகவே உலகக்கோப்பையில் வெல்கிறது என்று கங்குலி கூறி இருந்தார். இதற்கு அப்போது பாகிஸ்தான் தரப்பில் கடுமையான விமர்சனங்கள் வந்தது.

இந்த நிலையில் கங்குலி கூறியது போலவே போட்டி ஒரு தலைப்பட்சமாக இந்தியா பக்கம் முடிந்தது. இந்த போட்டி குறித்து பேசி உள்ள கங்குலி கூறும் பொழுது “எங்கள் காலத்தில் பாகிஸ்தான அணி வேறு மாதிரியாக இருந்தது. நாங்கள் விளையாடிய பாகிஸ்தான் அணி இது கிடையாது. பேட்டிங்கில் ஏற்படும் அழுத்தத்தை இந்த அணியால் சமாளிக்க முடியாது. இந்த உலகக் கோப்பையில் இனி பாகிஸ்தான் மீண்டும் வருவது என்பது கடினமானது.

ரோஹித் மிகச் சிறப்பாக விளையாடினார். இந்தியாவின் அனைத்து துறைகளும் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என எல்லாத் துறைகளும் சரியான நேரத்தில் சிறப்பாக வந்திருக்கின்றன!” என்று கூறி இருக்கிறார்!