இது பெங்களூர் பிட்ச் இல்லை; இது ஆஸ்திரேலியா – தினேஷ் கார்த்திக்கை தாக்கிய சேவாக்!

0
9595
Sehwag

இது அணி நேற்று டி20 உலக கோப்பை தொடரில் ஒரு முக்கியமான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அதிவேக ஆடுகளத்தைக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் மோதியது!

இந்தப் போட்டியில் இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் தவிர வேறு யாரும் குறிப்பிடும்படியாக விளையாடவில்லை. குறிப்பாகச் சூரியகுமார் யாதவ் அதிரடியான ஆட்டத்தின் மூலமாக அணியின் ஸ்கோரை உயர்த்திக் கொண்டு வரும்வேளையில், அவருக்கு ஒத்துழைப்பு தந்தால் போதும் என்கின்ற நிலையில், தினேஷ் கார்த்திக் தேவையில்லாமல் ஆடி விக்கெட்டை பறிகொடுத்து, இந்திய அணி 150 ரன்களை எட்ட முடியாதவாறு செய்துவிட்டார். இது மிகப்பெரிய விமர்சனத்தை ஒருபுறம் உருவாக்கி இருக்கிறது.

இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோதிய முதல் போட்டி பரபரப்பு திருப்பங்களோடு அமைந்த போட்டிகளில் உச்ச போட்டியாக இருந்தது. இந்தப் போட்டியில் ஒரு பந்துக்கு ஒரு ரன் எடுத்திருந்த தினேஷ் கார்த்திக், அணியின் வெற்றிக்கு இரண்டு பந்துகளில் 2 ரன்கள் தேவை என்கின்ற நிலையில், வீசப்பட்ட பந்தை அடிக்காததோடு, ரன் அவுட் ஆகி அணிக்கு நெருக்கடியை உருவாக்கினார். அடுத்து வந்த அஸ்வின் சமயோசிதமாக செயல்பட இந்திய அணி வெற்றி பெற்றது. இல்லையென்றால் தற்போது எழுந்திருக்கும் விமர்சனத்தை விட அதிகபட்ச விமர்சனங்களை தினேஷ் கார்த்திக் அப்பொழுதே சந்தித்து இருப்பார்.

இப்படியான நிலையில் அடுத்து நெதர்லாந்து அணி உடனான ஆட்டத்தில் இவருக்கு விளையாட வாய்ப்பு அமையவில்லை. இதற்கு அடுத்த நேற்று நடந்த மூன்றாவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் விளையாடிய போட்டியில், சூரியகுமார் இருக்கும் வரை அவருடன் இணைந்து ஒத்துழைப்பு தந்து, அவர் வெளியேறிய பிறகு தினேஷ் கார்த்திக் அடித்து விளையாட வேண்டும், இல்லையென்றால் கடைசி இரு ஓவர்களில் அடித்து விளையாட போக வேண்டும். இப்படியான சூழல் நிலவிய நிலையில், அதைப் புரிந்து கொள்ளாமல் விளையாடி, சூரியகுமார் இந்திய அணிக்கு ஏற்படுத்தித் தந்த அடித்தளத்தை வீணடித்து, சவாலான இலக்கை எட்ட முடியாமல் செய்து, இந்திய அணியின் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்து விட்டார்.

தினேஷ் கார்த்திக் குறித்து இந்திய அணியின் பிரபல முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறும்பொழுது ” ரிஷப் பண்ட் ஆரம்பத்தில் இருந்தே அணியில் இருந்திருக்க வேண்டும். அவர் ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டிருக்கிறார். அவருக்கு ஆஸ்திரேலியா சூழல் எப்படிப்பட்டது என்று நன்றாகத் தெரியும். ஆனால் தினேஷ் கார்த்திக் கடைசியாக ஆஸ்திரேலியாவில் எப்பொழுது விளையாடினார்? அவர் இப்படியான பவுன்சி ஆடுகளத்தில் கடைசியாக எப்பொழுது விளையாடினார்? இது தினேஷ் கார்த்திக் வழக்கமாக ஐபிஎல் தொடரில் விளையாடும் பெங்களூர் ஆடுகளம் கிடையாது. நான் தென்னாப்பிரிக்கா உடனான ஆட்டத்தின் போதே தீபக் ஹூடா பதில் ரிஷப் பண்ட் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தேன். ரிஷப் பண்ட் அங்கு விளையாடிய அனுபவம் கொண்டவர். அவர் விளையாடிய கபா டெஸ்ட் இன்னிங்ஸ் தலைசிறந்த ஒன்று ” என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய வீரேந்திர சேவாக் ” நான் அவர்களுக்கு ஆலோசனை சொல்லத்தான் முடியும் ஆனால் இறுதி முடிவு அவர்கள் தான் எடுக்க வேண்டும். தினேஷ் கார்த்திக் உடல் தகுதியுடன் இருந்தால் அவர்கள் மீண்டும் அவருடன்தான் செல்வார்கள். என்னை பொறுத்தவரை ரிஷப் பண்ட் ஆரம்பத்திலிருந்து இந்திய பிளேயிங் லெவனில் இருந்து இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்!