இந்த இந்திய வீரர் உலகக் கோப்பையில் மிக ஆபத்தான வீரராக இருப்பார் ; ஆஸ்திரேலிய பயிற்சியாளர் பிரமிப்பு!

0
2593
Ind vs Aus

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட வந்திருந்த ஆஸ்திரேலிய அணியுடன் தொடரை 1-1 என சமநிலையில் நேற்று முன் வரை வைத்து இருந்தது இந்திய அணி. தொடர் யாருக்கு என்று முடிவு செய்யும் தொடரின் கடைசி மற்றும் 3வது போட்டி நேற்று ராஜீவ் காந்தி மைதானத்தில் ஹைதராபாத் நகரில் நடந்தது!

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, இளம் வீரர்கள் கேமரூன் கிரீன் மற்றும் டிம் டேவிட் ஆகியோரது அதிரடி அரைசதங்களால் 186 என்ற சவாலான ஸ்கோரை 20 ஓவர்களின் முடிவில் பெற்றது. ஆட்டத்தின் துவக்கத்தில் கேமரூன் கிரீன் அதிரடியில் வெளுத்துக் கட்ட, ஆட்டத்தின் இறுதியில் டிம் டேவிட் அதிரடியில் நொறுக்கித் தள்ளி இலக்கை பெரிதாக்கினார்கள்.

இதையடுத்து களம் கண்ட இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் ஏமாற்றம் அளித்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த அனுபவ வீரர் விராட் கோலி மற்றும் அதிரடி வீரர் சூர்யகுமார் இருவரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சு தாக்குதலுக்கு சரியான பதிலடியை திருப்பி தந்தார்கள்.

இந்த ஆட்டத்தில் இருவரும் அரைசதம் அடிக்க, இந்திய அணி வெற்றியை நோக்கி எளிதாக சென்று விட்டது. ஆனாலும் கடைசி நேரத்தில் ஒரு சிறு பரபரப்பு உருவாக, அதைக் கொஞ்சமும் பதட்டப்படாமல் ஹர்திக் பாண்டியா மிக அழகாக முடித்து வைத்தார். இதனால் இந்திய அணி தொடரை வென்று அசத்தியது. நேற்றைய ஆட்டத்தில் சூரியகுமார் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகனாக அக்சர் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய அணி முழு வலுவான அணி என்று கூறமுடியாது ஆனால் அதே சமயத்தில் முழு வலுவான அணி எப்படி விளையாடுமோ அப்படித்தான் அவர்கள் விளையாடினார்கள். தொடர் முடிவுக்குப் பின் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் முக்கியமான விஷயங்களுக்கு பதிலளித்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக் டொனால்ட் கூறும்பொழுது ” உங்கள் டெத் பவுலிங்கில் நீங்கள் சிறப்பாக செயல்பட முடியுமா என்று எப்பொழுதும் உரையாடல்கள் இருந்து கொண்டே தான் இருக்கும். இதற்கு என்னுடைய பதில் எங்களால் முடியும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்பதுதான். நல்ல முடிவுகளை எடுக்கவும் நல்லபடியாக செயல்படவும் நாங்கள் வீரர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம். சில சமயங்களில் பேட்டிங் செய்யும் எதிரணி வீரர்கள் நம்மை தூக்கி எறிந்து விடுவார்கள். இந்தத் தொடர் முழுவதும் ஹர்திக் பாண்டியா அதைத்தான் செய்தார் ” என்று கூறினார்.

மேலும் அவர் சூர்யகுமார் யாதவ் பற்றி கூறும் பொழுது “சூர்யகுமார் யாதவ் இன்று மிகச் சிறப்பாக விளையாடினார். அவர் கட்டாயம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் ஆபத்தான வீரராக இருப்பார். அவரால் என்ன செய்ய முடியும் என்று இன்று மிகத் தெளிவாக காட்டினார் ” என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்.

அடுத்து அக்சர் படேல் பற்றி அவர் கூறும் பொழுது ” குறிப்பாக அக்சர் படேல் சிறப்பான தொடரை கொண்டிருந்தார். ஜட்டு வெளியேறியது இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு மாற்றாக மிகச்சிறப்பான ஒரு வீரரை கண்டுபிடித்து இருக்கிறார்கள் ” என்று பாராட்டி கூறியிருக்கிறார்!