இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் விடை பெற்றுக் கொள்ள இருக்கும் சீனியர் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் – பிராட் ஹாக் அதிர்ச்சி தகவல்

0
451
Brad Hogg

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமாக விளையாடி முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறியது. ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளிலேயே 8 போட்டிகளில் வெற்றி பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி அடைந்து விட்டது. ரசிகர்கள் அனைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த வருடம் நிச்சயமாக தொடரை கைப்பற்றி, நான்காவது ஐபிஎல் கோப்பையை ருசி பார்க்கும் என்று எதிர்பார்த்துள்ளனர்.

மகிழ்ச்சியுடன் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிராட் ஹாக் அதிர்ச்சியான செய்தி ஒன்றை தற்பொழுது கூறியுள்ளார்.

இந்த ஐபிஎல் முடிந்தவுடன் தன்னுடைய ஓய்வை அவர் அறிவிப்பார்

2008ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திரசிங் தோனி மிக சிறப்பாக தன்னுடைய பணியை செய்து வருகிறார். கடந்த ஆண்டை தவிர்த்து, 2008 முதல் தற்போது வரை ஐபிஎல் தொடரில் அவரது தலைமையில் சென்னை அணி 11 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாக ஜொலித்து வருகிறது. அவரது தலைமையில் எட்டு முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று, இதுவரை மொத்தமாக மூன்று முறை ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல இளம் வீரர்களை சிறப்பாக வழிநடத்தி இந்திய அணியில் விளையாடும் அளவுக்கு மகேந்திர சிங் தோனி அவர்களது கிரிக்கெட் கேரியரை மேம்படுத்தி இருக்கிறார். மேலும் ஒரு வீரராக பல போட்டிகளில் சென்னை அணியை கரை சேர்த்திருக்கிறார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவரது ஃபார்ம் அவ்வளவு சிறப்பாக இல்லை. குறிப்பாக நடப்பு ஐபிஎல் தொடரில் அவருடைய பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. நாற்பது வயதை எட்டிவிட்ட அவர், தன்னுடைய பழைய வேகத்தில் விளையாட சிரமப்படுகிறார். சமீபத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், அவர் அவுட்டான விதமே அதற்கு சாட்சி. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கையில் மகேந்திர சிங் தோனி இந்தாண்டு ஐபிஎல் தொடருடன் விடை பெற்றுக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாக பிராட் ஹாக் கூறியுள்ளார்.

இந்திய அணியின் ஆலோசகர் போல சென்னை அணியிலும் தன்னுடைய பணியை தொடர்வார்

நாற்பது வயதை எட்டிவிட்ட காரணத்தினாலும், பேட்டிங்கில் முன்பு போல பழைய வேகம் இல்லாத காரணத்தினாலும் இந்த முடிவை நிச்சயமாக அவர் எடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது இந்திய அணிக்கு ஆலோசகராக, உலக கோப்பை டி20 தொடரில் தன்னுடைய பணியை செய்ய காத்துக் கொண்டிருக்கிறார்.

அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து அவர் ஒரு வீரராக ஓய்வு பெற்றாலும், நிச்சயமாக ஏதேனும் ஒரு பணியில் இடம் வகித்து சென்னை அணி வீரர்களின் கிரிக்கெட் கேரியரை மேம்படுத்துவார். சென்னை அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் பதவி வகிக்கவும் நிறைய வாய்ப்பு உள்ளது என்று பிராட் ஹாக் கூறியுள்ளார்.