ருதுராஜ் தோக்கனும்னு நினைக்கிறாங்க.. அந்தப் பையன் தோனி வளர்ப்பு.. அவன்தான் அடுத்த கேப்டன் – இந்திய முன்னாள் வீரர் பரபரப்பு பேச்சு!

0
2031
Ruturaj

தற்பொழுது இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவத்திலும் இளம் வீரர்கள் நிறைய பேர் உள்வாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் நிர்வாகம் புதிய அணியை உருவாக்குவதற்கு பெரிய மாற்றங்களுக்கு தயார்படுத்திக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் நிறைவடைந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் மூன்று வடிவிலான தொடர்களிலும் இந்திய அணிக்காக வேகபந்துவீச்சாளர் முகேஷ் குமார் அறிமுகமானார். இதன் மூலம் அவரது அடிப்படை திறமைகள் கண்டறியப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்த சுற்றுப்பயணத்தில் ஜெய்ஸ்வால் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணிக்காக அறிமுகமானார். கடந்த இரண்டு வருடங்களாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான செயல்பாட்டை கொண்டிருந்த திலக் வர்மா டி 20 தொடரில் அறிமுகமானார்.

இதில் ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மா இருவரும் குறைந்தபட்சம் இந்திய டி20 அணியில் நிரந்தர இடத்தை பெறக்கூடியவர்களாக தெரிகிறார்கள். மேலும் ஜெயஸ்வால் கட்டாயமாக இந்திய டெஸ்ட் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக இனி தொடர்ந்து இருப்பார்.

இப்படியான நிலையில் நீண்ட காலமாக உள்நாட்டு மற்றும் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பான செயல்பாட்டை கொண்டு இருக்கும் ருதுராஜுக்கு சரியான தொடர்வாய்ப்புகள் இந்திய அணியில் தரப்படவே இல்லை.

- Advertisement -

இந்த நிலையில் ஆசியக் கோப்பையை முன்னிட்டு முக்கிய வீரர்களுக்கு அயர்லாந்து டி20 தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கின்ற காரணத்தினால், ருத்ராஜ் விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். மேலும் உலகக் கோப்பை இருக்கின்ற காரணத்தினால் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய டி20 அணியை கேப்டனாக வழி நடத்துகிறார்.

தற்போது ருதுராஜ் எதிர்காலம் பற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சபா கரீம் கூறும் பொழுது “ருதுராஜ் டெஸ்ட் அறிமுகத்திற்காக நான் காத்திருக்கிறேன். ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் சிறந்த வீரர்கள். ருதுராஜ் அனைத்து வடிவங்களிலும் விளையாட முடியும். அதற்கான அடிப்படை திறமைகள் அவரிடம் இருக்கிறது.

அவரால் இந்தியாவின் வருங்கால கேப்டன் ஆகவும் ஆக முடியும். அவர் மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ் விளையாடுகிறார். எனவே அவர் அணியை கையாள்வது மற்றும் சூழ்நிலையை கையாளுவது தொடர்பான விஷயங்களை கற்று இருப்பார் என்று நம்புகிறேன். அவர் ஒரு தரமான வீரர். நான் அவருடைய டெஸ்ட் அறிமுகத்திற்காக காத்திருக்கிறேன்.

ஜெய்ஸ்வால் டெஸ்ட் அறிமுகத்தில் சதம் அடித்தார். பின்பு வெஸ்ட் இண்டீஸ் டி 20 தொடரில் அரை சதம் அடித்தார். எனவே ருதுராஜுக்கு விஷயங்கள் எளிதாக இருக்காது. ஏனென்றால் அவர் தோல்வியடைய வேண்டுமென்று வெளியே நிறைய பேர் காத்திருக்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் வாய்ப்பு பெறுவார்கள்.

இந்த நேரத்தில்தான் உங்களது கதாபாத்திரம் வெளியே வர வேண்டும். இந்த அழுத்தத்தை ஏற்று உங்களால் தாங்க முடியுமா? இதனால்தான் அவர் அவரது திறமையை நம்பி பெரிய ஸ்கோர்களை எடுக்க வேண்டிய முக்கியமான நேரம் இது!” என்று கூறியிருக்கிறார்.