சூரியகுமார் மாதிரி பிளேயர் ஆயிரத்தில் ஒருத்தன் தான் கிடைப்பான் – லெஜெண்ட் கபில் தேவ் புகழாரம்!

0
711

சச்சின், லாரா, விராட் கோலி போன்று துல்லியமாக பந்தை எதிர்கொள்ளும் வீரராக சூரியகுமார் யாதவ் தெரிகிறார் என புகழாரம் சூட்டியுள்ளார் கபில்தேவ்.

மிஸ்டர் 360 டிகிரி என அழைக்கப்படும் சூரியகுமார் யாதவ், இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 51 பந்துகளில் 112 ரன்கள் விளாசினார். டி20 போட்டிகளில் இவர் அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும்.

- Advertisement -

ரோகித் சர்மாவிற்கு அடுத்தபடியாக அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் ஆவார். இரண்டாவது அதிகபட்ச சதங்கள் அடித்த வீரராகவும் இருக்கிறார்.

சூரியகுமார் யாதவ், கடந்த 2022 ஆம் ஆண்டு 1164 ரன்கள் அடித்திருந்தார். ஏற்கனவே ஒரு சதம் மற்றும் அரைசதத்துடன் இந்த வருடத்தை துவங்கிவிட்டார்.

இந்நிலையில் இலங்கை அணியுடன் இவர் அடித்த சதத்திற்கு பிறகு, சூரியகுமார் யாதவின் பேட்டிங்கை பற்றி பேசியதோடு மட்டுமல்லாமல், பல ஜாம்பவான்கள் பேட்டிங் உடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் லெஜெண்ட் கபில் தேவ்.

- Advertisement -

“சூரியகுமார் பேட்டிங் பார்த்த பிறகு எனக்கு சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரது பேட்டிங் பார்க்கும் பொழுது நிச்சயம் இவர்கள் வரிசையில் இடம் பிடிப்பதற்கு அசாத்திய திறமை வேண்டும் என நினைக்கத் தோன்றும். அப்படியொரு திறமை படைத்தவர் சூரியகுமார் யாதவ்.

நான் விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர் விராட் கோலி, ரிக்கி பாண்டிங், டி வில்லியர்ஸ் ஆகியோரது பேட்டிங் பார்த்துள்ளேன். வெகு சிலர் தான் துல்லியமாக பந்தை நினைத்த திசையில் அடிப்பார்கள். சூரியகுமார் யாதவ், க்ளீனாக பந்தை அடிக்கிறார். இவர் அடிக்கும் பைன்-லெக் ஷாட்கள் அசாத்தியமானதாக இருக்கிறது.

தங்குதடையின்றி பவுலரின் லைன் மற்றும் லென்த் இரண்டையும் துல்லியமாக கணித்து எதிர்கொள்கிறார். அதேபோல் மிட்-விக்கெட், கவர் மற்றும் ஆப் திசைகளில் அபாரமாக விளையாடுகிறார். இதனால் பவுலர்கள் இவருக்கு எப்படி பந்து வீசுவது என்று தெரியாமல் திணறி விடுகின்றனர். பவுலர்களின் தவறுகளை சரியாக பயன்படுத்துகிறார். இப்படிப்பட்ட வீரர் நூற்றாண்டில் ஒருமுறை மட்டுமே கிடைப்பார்.” என்று பெருமிதமாக பேசினார்.