இந்த 3 அணிகள்தான் இந்த டி20 உலகக்கோப்பையில் முக்கியமான அணிகள் – பிரட் லீ கணிப்பு!

0
3987
Lee

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் டி20 உலகக்கோப்பை நடக்க இருக்கிறது. ஒரு டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பது இதுவே முதல் முறை!

இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கு பெறுகின்றன. 12 அணிகள் பங்குபெறும் பிரதான சுற்றுக்கு 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றிருக்கிறது. மீதி நான்கு அணிகள் தகுதி சுற்றின் மூலம் தேர்வு செய்யப்படுகிறது. இந்த தகுதிச்சுற்றில் 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, அதில் இரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் பிரதான சுற்றுக்கு கொண்டுவரப்படும். அடுத்து பிரதான சுற்றில் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, இரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அதிலிருந்து இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

நடைபெற இருக்கும் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் அக்டோபர் 16ஆம் தேதி ஆரம்பித்து அக்டோபர் 21ஆம் தேதி முடிகிறது. அக்டோபர் 22-ஆம் தேதி பிரதான சுற்றில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. அடுத்த நாள் அக்டோபர் 23ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதி நடக்கிறது.

இந்த உலக கோப்பையில் பங்குபெறும் 16 அணிகளும் தங்கள் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பித்து விட்டன. இந்தப் பட்டியலில் ஏதாவது மாற்றங்கள் செய்யலாம் என்றால் அக்டோபர் 9-ம் தேதிக்குள் செய்து கொள்ளலாம் என்று ஐசிசி விதி கூறுகிறது. இந்திய அணி அக்டோபர் ஆறாம் தேதி இங்கிருந்து ஆஸ்திரேலியா கிளம்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் விளையாட இந்தியா வந்திருந்த, ஆஸ்திரேலிய அணியின் பிரபல முன்னாள் வலது கை வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ இடம், இந்த டி20 உலகக் கோப்பையில் எந்த அணிகள் முக்கியமானதாக இருக்கும் என்றும், பும்ரா தற்போது இருக்கும் நிலை பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள பிரட் லீ
” நடக்க இருக்கும் டி20 உலக கோப்பையில் தொடரை நடத்தும் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய அணிகளாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் விளையாடப்படும் இந்த டி20 உலக கோப்பையில் கடைசி நான்கைந்து ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்துவது அவசியம். எந்த அணி கடைசி சில ஓவர்களில் ரன்களை மிகச்சிறப்பாக கட்டுப்படுத்துகிறதோ அந்த அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகம்” என்று கூறியிருக்கிறார்.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வின் நிலை பற்றி பேசிய அவர் ” அவர் இருந்தால் இறுதிக் கட்ட ஓவர்களில் மிகச் சிறப்பாகப் பந்துவீசுவார் . அவர் இல்லாத பொழுது அவரைப்போல் இறுதிக் கட்ட ஓவர்களில் மிகச்சிறப்பாக பந்துவீசும் ஒருவரை இந்திய அணி கொண்டு வரவேண்டும் ” என்று கூறியிருக்கிறார்!