“பேசுறவன் கடைசிவரை பேசிட்டே தான் இருப்பான்” விராட் கோலி பாணியில் பதிரிக்கையாளர்களுக்கு பதில் கூறிய பாபர் அசாம்!

0
165

இங்கிலாந்து அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார் பாபர் அசாம்.

சுமார் 17 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் நாட்டில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது இங்கிலாந்து அணி. ஏற்கனவே நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்திய பென் ஸ்டோக்ஸ் மற்றும் ப்ரண்டன் மெக்கல்லம் கூட்டணி பாகிஸ்தான் அணியை பதம் பார்ப்பதற்கு தயாராகியது.

நிதானம் என்ற பேச்சிற்கு இடமில்லாமல் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இருந்தே அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணியை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திக்குமுக்காடியது. இறுதியாக 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய பிறகே இங்கிலாந்து அணி ஓய்ந்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில், பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் ஒயிட்-வாஷ் ஆனது இதுவே முதல் முறையாகும். இத்தகைய படுதோல்விக்கு பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டு பேசினார் பாபர் அசாம்.

இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிற்கு முன்னதாக, பாகிஸ்தான் அணி நிர்வாகத்தின் சேர்மன் ரமீஷ் ராஜா பேசியபோது, “நான் பாபர் அசாமிடம் முன்னமே கூறினேன். இங்கிலாந்து அணி டி20 போட்டிகள் போன்று டெஸ்ட் போட்டிகளை விளையாடுகிறார்கள். அதற்கேற்றவாறு நாமும் அணியை தேர்வு செய்து களம் இறக்கவேண்டும் என்று பேசினேன்.

சமகாலத்தில் அவர்களது அணுகுமுறை தான் மிகவும் சிறந்தது. அதை நாமும் பயன்படுத்திக் கொள்வோம் என்றேன். பாபர் அசாம் அதை கடைசி வரை செய்யவில்லை.” என சாடினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இதற்கு பதில் அளித்த பாபர் அசாம், “ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக கருத்துக்களை நம்மிடம் கொண்டு வருவார்கள். நாம் நிதானமாக விளையாடினால், ஏன் அதிரடியாக விளையாடவில்லை? என கேட்பார்கள். அதிரடியாக விளையாடினால், ஏன் நிதானமாக விளையாடவில்லை? என கேட்பார்கள்.

போட்டியை வெல்லவேண்டும். இல்லையெனில் இப்படி பலவிதமான கருத்துக்கள் முன்வைக்கப்படும் எதற்கும் செவி சாய்க்காமல் என்ன தவறு என்பதை மட்டுமே சரி செய்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும். இதுதான் தற்போது எனது குறிக்கோளாக இருக்கிறது. அணுகுமுறையை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. அதற்கான காலம் எடுக்கும். ஒவ்வொரு போட்டியிலும் சிறு சிறு மாற்றங்கள் மூலமாக அந்த அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும். அதை வெளியில் இருப்பவர்கள் புரிந்து கொண்டால் மட்டுமே இது சாத்தியப்படும்.” என பாபர் அசாம் பேசினார்.