5600 கோடி கொடுத்து வாங்கிய குஜராத் அணி வென்றது 20 கோடி ! ஐ.பி.எல் அணிகளுக்கு வருமானம் எப்படி வருகிறது ?

0
840
Gujarat Titans IPL Champions 2022

ஒரு ஐ.பி.எல் அணி வீரர்களுக்கு மட்டுமே ஏறக்குறைய 90 கோடி சம்பளம் கொடுக்கிறது. இதுதவிர தங்குமிடம் இன்னபிற வசதிகள் மற்றும் பயிற்சிகளுக்கான செலவுகள் என்று நிறைய இருக்கிறது. ஆனால் ஐ.பி.எல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 20 கோடிகள், ரன்னர்-அப் அணிக்கு 13 கோடிகள், இரண்டாவது குவாலிபையரில் தோற்கும் அணிக்கு 7 கோடிகள், எலிமினேட்டர் போட்டியில் தோற்கும் அணிக்கு 6.5 கோடிகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இப்படியிருக்கும் போது ஐ.பி.எல் அணிகளுக்கு எப்படி வருமானம் வருகிறது? 5600, 7090 கோடிகள் கொட்டிக்கொடுத்து வாங்கப்பட்ட குஜராத், லக்னோ அணிகள் எப்படிச் சமாளிக்கின்றன? இதைத்தான் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்க போகிறோம்.

ஐ.பி.எல் தொடரில் உண்மையான வருமானம் என்பது களத்திற்கு உள்ளே கிடையாது வெளியில்தான் இருக்கிறது. இதன் மொத்த வருமானத்தையும் கட்டுப்படுத்தும் அமைப்பாக பி.சி.சி.ஐ இருக்கிறது. மொத்தம் நான்கு வழிகளில் இங்கு பணம் திரள்கிறது. பெரிய நிறுவனங்களால் பி.சி.சி.ஐ-க்கு பணம் கொடுக்கப்பட்டு அணிகள் வாங்கப்படுகின்றன. அணிகளுக்கு தனி ஸ்பான்சர்கள் கிடைக்கிறார்கள். பி.சி.சி.ஐ ஒளிபரப்பு உரிமையை பெருந்தொகைக்கு விற்கிறது. ஒளிபரப்பு உரிமையை வாங்கிய தொலைக்காட்சி நிறுவனத்திடம் விளம்பரதாரர்கள் வருகிறார்கள். இந்த நான்கு முறைகளிலும் ஐ.பி.எல் தொடரில் பணம் சுழல்கிறது.

இதில் பி.சி.சி.ஐ அணிகளை விற்று வருமானத்தை ஈட்டியதிற்கு அடுத்து, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விற்று பெரிய வருமானம் ஈட்டுகிறது. ஐ.பி.எல் தொடரின் முதல் பத்து வருடங்களுக்கு 8207 கோடிகள் கொடுத்து சோனி தொலைக்காட்சி குழுமம் ஒளிபரப்பு உரிமையை வாங்கியிருந்தது. அடுத்து ஐந்து வருடத்திற்கு 16,400 கோடி கொடுத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் ஒளிபரப்பு உரிமையை வாங்கியிருந்தது. அதாவது வருடத்திற்கு 3300 கோடிகள். இவ்வளவு பணம் கொடுத்து வாங்கிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் இலாபம் ஈட்ட முடியுமா என்றால், பத்து வினாடிகளுக்கு 15 இலட்சம் விளம்பர கட்டணமாக வசூலித்தால் இலாபம் ஈட்ட முடியுமா முடியாதா என்று நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்.

அடுத்து பி.சி.சி.ஐ ஸ்பான்சர்கள் மூலமும் வருமானம் ஈட்டுகிறது. உதாரணமாக நடப்பு ஐ.பி.எல் தொடர் டாடா ஐ.பி.எல் என்று அழைக்கப்பட்டது. இதற்கு டாடா குழுமம் பி.சி.சி.ஐக்கு கொடுத்த தொகை 300 கோடி. இது மட்டும் இல்லாமல் சியட் டயர் நிறுவனம் ஸ்டாடர்ஜி டைம் அவுட்டிற்கு ஸ்பான்சர் தொகையாக 30 கோடி கொடுத்திருக்கிறது. இதுபோல கிரெட் பவர்ப்ளே, ட்ரீம் லெவன் கேம் சேன்ஞர் என்று ஸ்பான்சர்கள் நிறைய. இதுமூலம் மட்டுமே பி.சி.சி.ஐக்கு 230 கோடி உபரி வருமானம் கிடைத்திருக்கிறது.

இப்பொழுது அணிகளுக்கு எந்தெந்த வகைகளில் எப்படி வருமானம் வருகிறது என்று பார்க்கலாம். பி.சி.சி.ஐ ஒளிபரப்பு உரிமையை விற்ற தொகையிலும், ஸ்பான்சர்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இருந்தும் 50% பணத்தை அணிகளுக்கு வழங்குகிறது. இதுமட்டும் அல்லாமல் அணிகளுக்கும் தனி ஸ்பான்சர் உண்டு. ஒவ்வொரு அணியும் குறைந்தது தங்கள் ஜெர்சியில் பத்து ஸ்பான்சர்களையாவது சுமந்து இருக்கும். உதாரணமாக மும்பை அணி சாம்சங், சென்னை அணி முத்தூட் பைனான்ஸ் நிறுவன பெயர்களை ஜெர்சியில் பொறித்திருப்பது போல. இதன் மூலம் கிடைக்கும் பணம் அணிகளுக்கே சொந்தம். அடுத்து போட்டி நடக்கும் மைதானத்தின் டிக்கெட்டுகள் விற்கப்படுவதில் 80% பணம் அணிகளுக்கே கிடைக்கிறது. மீதி 20% பணம் மைதானம் அமைந்துள்ள மாநில கிரிக்கெட் சங்கத்திற்குப் போகிறது. அடுத்து ப்ளேஆப்ஸ் சுற்றுக்குள் நுழைவதால், கோப்பையை வெல்வதால் கிடைக்கும் பணத்தில் பாதி அணிக்கும் மீதி வீரர்களுக்கும் பிரித்து தரப்படுகிறது.

இந்தந்த முறைகளில் எல்லாம் ஐ.பி.எல் அணிகளுக்கு வருமானம் கொட்டுகிறது. அதனால்தான் வீரர்களுக்குப் பெரிய தொகையைச் சம்பளமாகக் கொடுக்கும் மொத்தப் பணத்தில் இருமடங்கு தொகையை வீரர்களின் வசதி, பயிற்சிக்காக வருடந்தோறும் செலவு செய்கின்றன! ஐ.பி.எல் தொடரில் ஒரு அணியின் வருமானம் என்பது அந்த அணியின் பிராண்ட் வேல்யூதான். உதாரணமாக ராஜஸ்தான் அணியின் பிரான்ட் வேல்யூ 250 கோடி. சென்னை அணியின் பிரான்ட் வேல்யூ 2700 கோடி. இதனால்தான் அணிகளின் மதிப்பை கூட்டுவதற்காக, சிறப்பாகச் செயல்படும் இந்திய அணியின் நிரந்தர வீரர்களுக்குக் கொட்டிக்கொடுத்து எடுத்து அணிகள் கேப்டன் ஆக்குவது. உதாரணமாக 15 வருட ஐபிஎல் வரலாற்றில் ஒருமுறைக்கூட கோப்பையை வெல்லாத பெங்களூர் அணிதான் மும்பை, சென்னைக்கு அடுத்து வணிகத்தில் மூன்றாவது பெரிய அணி. இந்தக் களத்தில் முக்கியம் சாம்பியனாகி கிடைக்கின்ற 20கோடி அல்ல, பிரான்ட் வேல்யூதான்!