“போன மேட்ச்ல எடுத்த முடிவே வேற.. இனி இந்த வீரர் மாதிரிதான் ஆடபோறேன்!” – திலக் வர்மா வெளிப்படையான பேச்சு!

0
6610
Tilak

இந்திய கிரிக்கெட்டுக்கு கடந்த இரண்டு வருடங்களில் ஐபிஎல் தொடரில் இருந்து சில நல்ல இளம் பேட்ஸ்மேன் கிடைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

குறிப்பாக கிடைக்கக்கூடிய பேட்ஸ்மேன்கள் எல்லோருமே இடதுகை வீரர்களாக இருக்கிறார்கள். இந்த வரிசையில் ஜெய்ஷ்வால், சாய் சுதர்ஷன், திலக் வர்மா, ரிங்கு சிங் நான்கு பேரும் அடக்கம்.

- Advertisement -

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தைரியத்தைக் காட்டி விளையாட கூடியவர்கள். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் இவர்கள் ஒவ்வொருவரும் பேட்டிங் யூனிட்டில் வேறு வேறு ஆன இடங்களில் விளையாடக் கூடியவர்கள். இதனால் இவர்கள் அனைவரும் ஒரே அணியில் விளையாட முடியும் என்பதுதான் சிறப்பு.

இதில் முதலில் கவனம் ஈர்த்தவராக 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடிய 20 வயதான திலக் வர்மா இருக்கிறார். இவர் பேட்டிங்கில் இருக்கக்கூடிய சிறப்பு அம்சம் என்னவென்றால், தைரியமாக விளையாடும் அதே நேரத்தில், சூழ்நிலையைப் புரிந்து அதற்கு ஏற்றபடியும் விளையாடுவார். மேலும் களத்தில் இவர் நிற்கும் பொழுது பார்ப்பவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் படி இவர் ஆட்டம் இருக்கும்.

கடந்த போட்டியில் உள்ளே வந்து இரண்டு பவுண்டரிகளை அடித்து அடுத்து உடனே மீண்டும் பெரிய ஷாட் அடிக்க சென்று விக்கெட்டை இழந்தார். இந்த இடங்களில் இவர் மற்றும் சூரியகுமார் விக்கெட்டை இழக்க ஆட்டம் கடைசிப்பந்து வரைக்கும் சென்று விட்டது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள திலக் வர்மா கூறும் பொழுது “கடந்த ஆட்டத்தில் ஒரு லெக் ஸ்பின்னருக்கு எதிராக பொறுப்பேற்று நானே அடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஓவருக்கு 10 ரன்கள் எடுக்க விரும்பினேன்.

வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கேப்டன் சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். அவர் அவர்களைப் பார்த்துக் கொள்வார். அவர் ஆட்டத்தை முடிப்பார் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. எனவே நான் குறிப்பிட்ட பந்துவீச்சாளரை தாக்குவதற்கு முயற்சி செய்தேன்.

ஐபிஎல் தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் நான் விளையாடியிருக்கிறேன். ஒரு கேப்டனாக அவர் காலத்தில் மிகவும் அமைதியாக இருப்பார். அவர் தன்னுடைய எண்ணத்தில் தெளிவாக இருப்பார். கடந்த காலங்களில் அவர் கடினமான சூழ்நிலைகளிலும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

நான் இதற்கு முன்பு 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணிகள் விளையாடிய பொழுது கேரளாவில் வந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடியிருக்கிறேன். அப்பொழுது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தது. ஆனால் பொதுவாக இங்கு மெதுவான மற்றும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமே இருக்கும். எனவே நிலைமைகளை பார்த்து அதற்கேற்ற முடிவு செய்வோம்.

நான் ரிங்கு சிங் போல கடைசி வரை இருந்து ஆட்டத்தை முடிக்க விரும்புகிறேன். அடுத்த போட்டிகளில் இனி நான் கடைசி வரை நின்று அணிக்கு ஆட்டத்தை வென்று தருவேன்!” என்று கூறியிருக்கிறார்!