திக் திக் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி ; பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு முடிகிறதா?

0
15490
Ind vs Sa

தற்பொழுது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலக கோப்பையில் இன்று தென்னாபிரிக்கா இந்திய அணிகள் முக்கியமான ஒரு போட்டியில் அதிவேக பெர்த் மைதானத்தில் மோதிக்கொண்டன!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தைரியமாக பேட்டிங் செய்வதென அறிவித்தார். ஆனால் இந்திய அணியில் கேஎல் ராகுல் 9 ரன்கள், ரோகித் சர்மா 15 ரன்கள், விராட் கோலி 12 ரன்கள், ஹர்திக் பாண்டியா 2 ரன்கள், தீபக் 0, தினேஷ் கார்த்திக் 6 ரன்கள் என யாருமே சரியாக விளையாடாததால் இந்தியா அணிக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவானது.

ஆனால் தான் மட்டும் இன்னொரு ஆடுகளத்தில் விளையாடுவது போல் அதிரடியாக விளையாடிய சூரிய குமார் யாதவ் 40 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தினார். இதில் ஆறு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் அடக்கம். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 133 ரன்கள் சேர்த்தது.

இதை அடுத்து இந்த சிறிய இலக்கை நோக்கி களம் இறங்கிய தென்னாபிரிக்க அணிக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்தார்கள். அர்ஸ்தீப் சிங் ஆட்டத்தில் இரண்டாவது தனது முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமாவை முகமது சமி வெளியேற்றினார். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த எய்டன் மார்கரம் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் பொறுப்புடன் விளையாட ஆரம்பித்தார்கள். எய்டன் மார்க்ரம் அரை சதம் அடித்து ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் வெளியேறினார்.

இதற்கு அடுத்து களத்தில் நின்ற டேவிட் மில்லர் மிகவும் பொறுப்பெடுத்து விளையாடி அவரும் அரை சதம் அடித்தார். ஆட்டத்தில் பெரிதாக எங்கும் பரபரப்பான சூழல் நிலவாத நிலையில், 19வது ஓவரை வீசிய முகமது சமி மிகச்சிறப்பாக வீசி ஆறு ரன்கள் மட்டுமே தர, அவருக்கு ஆறு ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்தை புவனேஸ்வர் குமார் ரன் இல்லாமல் வீச, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனால் அதற்கு அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து டேவிட் மில்லர் எளிதாக தனது அணியை வெற்றி பெற வைத்து விட்டார்.

இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா அணி மூன்று ஆட்டங்களில் ஐந்து புள்ளிகள் எடுத்து தனது குழுவில் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய அணி 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்து பங்களாதேஷ் 4 புள்ளிகள் ஜிம்பாப்வே மூன்று புள்ளிகள் உடன் அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில், பாகிஸ்தான் அணி தனக்கு எஞ்சி இருக்கும் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆறு புள்ளிகள் உடன் அரை இறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற ஒரு நிலை இருந்தது. தற்போது தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றதால் ஏறக்குறைய பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு முடிந்து விட்டது என்று கூறலாம். இனி இந்திய அணி தான் சந்திக்கும் பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளை வெல்ல வேண்டும். அல்லது ஒரு போட்டியில் வென்றால் கூட நல்ல ரன் ரேட் கொண்டு இருக்க வேண்டும்.