மூன்று முறை உலகக்கோப்பை நடத்துற நாடு ஜெயிச்சிருக்கு.. ஆனா இந்த முறை.. வாசிம் அக்ரம் வித்தியாசமான கருத்து!

0
385
Akram

இந்த ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரையில் இந்தியாவில் வைத்து முதல் முறையாக முழுமையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட இருக்கிறது!

இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா இங்கிலாந்து, நியூசிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

- Advertisement -

இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரும் கடந்த முறை போலவே, ஒரு அணி மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதி, புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். பிறகு இறுதிப் போட்டி அதற்கு அடுத்து வெல்லும் அணி சாம்பியன் என்பதாக அமைந்திருக்கிறது.

கடந்த மூன்று உலகக் கோப்பைகளை எடுத்துக் கொண்டால் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்திய இந்திய அணியே வென்றது. அடுத்து 2015 ஆம் ஆண்டு உலக கோப்பையை நடத்திய ஆஸ்திரேலியாவும், அதற்கு அடுத்து 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்திய இங்கிலாந்தும் வென்றன.

தற்போது இந்தியாவில் வைத்து உலகக் கோப்பை நடைபெற இருப்பதால், இந்து வெற்றி முறை தொடரும் என்று பரவலாக வெளியில் எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த நாட்டில் நடக்கின்ற காரணத்தினால் இந்திய அணிக்கு கூடுதல்அனுகூலங்கள் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

- Advertisement -

தற்போது இதுகுறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் லெஜன்ட் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் ” இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு வரிசையில் முகமது சமி இருக்கிறார். அவர் கனவில் இருந்து பந்து வீசுவது போல மிகவும் அபாரமாக பந்து வீசுகிறார். ஆனாலும் கூட பும்ரா உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். உடல் தகுதி நிலைமையில் அவர் எப்படி இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் நன்றாக இருந்தால் நிச்சயம் பெரிய மாற்றத்தை உண்டாக்குவார். இதைத் தவிர அவர்களிடம் நல்ல ஸ்பின்னர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். ஜடேஜா, அஸ்வின் யார் விளையாடுகிறார்கள் என்று பார்ப்போம்.

இந்தியாவில் இருந்து சில நல்ல வீரர்கள் வந்திருக்கிறார்கள்தான். ஆனால் சொந்த நாட்டில் விளையாடுவதில் சில தீமைகளும் இருக்கிறது. அதில் முக்கியமானது சொந்த நாட்டில் விளையாடுவதால் வென்றே ஆக வேண்டிய அழுத்தம். இதே மாதிரியான அழுத்தம் எங்களது பாகிஸ்தான் அணிக்கும் உண்டு. ஆனால் இந்தியாவிற்குதான் முழுமையான அழுத்தம் இருக்கிறது.

மேலும் உலகக் கோப்பையில் போட்டிகள் நடைபெறுவதில் தேதிகள் மாற்றப்பட்டுள்ளது. நான் முன்பே சொன்னது தான் நமக்கு முன்கூட்டியே தேதிகள் கிடைத்து விட்டால், அது எந்த இடமாக இருந்தாலும் போய் விளையாட வேண்டியதுதான். இதனால் எந்த பிரச்சனையும் கிடையாது. எனவே போய் விளையாடுங்கள்!” என்று பாகிஸ்தான் அணிக்கும் சேர்த்துக் கூறியிருக்கிறார்!