தற்பொழுது 17 வது ஐபிஎல் சீசன் மார்ச் 22ஆம் தேதி துவங்கி மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடர் மே மாதம் 26 ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. இதற்கு அடுத்து உலக கிரிக்கெட்டில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு பிறகு மூன்று ஐபிஎல் சீசன்கள் முடிவடைய இருக்கின்றன. எனவே ஐபிஎல் நிர்வாகம் அடுத்த ஆண்டு மெகா ஏலத்திற்கு செல்வதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதியிலே அல்லது, 2025 ஆம் ஆண்டு ஆரம்பத்திலோ மெகா ஏலம் நடத்தப்படும்.
மேலும் ஐபிஎல் சேர்மன் அருண் துமால் கூறும் பொழுது ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படுவது உறுதி, ஒவ்வொரு அணிகளும் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும், இப்படி செய்வதின் மூலமாகத்தான் புதிய அணிகள் உருவாகும், சுவாரசியமாகவும் இருக்கும், எனவே ஐபிஎல் மெகா ஏலம் அவசியமானதாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.
எல்லா அணிகளும் தங்கள் அணியில் இருக்கும் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என்பது, பெரிய அணிகளுக்கு பிரச்சனையான ஒன்றாக மாறுகிறது. அதே சமயத்தில் சிறிய அணிகளுக்கு அதுவே சாதகமான விஷயமாக அமைகிறது. எனவே ஐபிஎல் நிர்வாகத்தின் வீரர்களின் தக்க வைப்பு எண்ணிக்கை குறித்து அணி நிர்வாகங்கள் எதிர்ப்பு ஆதரவு இரண்டையும் முன் வைக்கின்றன.
பெரிய அணிகள் அதிக வீரர்களை தக்கவைப்பது மூலமாகத்தான், வீரர்களுக்கான ரசிகர்களை தங்களால் தொடர முடியும் என்றும், அதன் மூலம்தான் வணிகம் பெரிய அளவில் உருவாகும் என்றும் கூறுகிறார்கள். அதே சமயத்தில் சிறிய அணிகள் தங்கள் அணிகளை வலிமையாக்க ஒவ்வொரு அணிகளும் குறைந்த அளவில் வீரர்களை தக்க வைப்பதுதான் சரியானது என்று வாதிடுகிறார்கள். மேலும் பெரிய அணிகள் எட்டு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதை நிச்சயம் பிசிசிஐ ஏற்றுக் கொள்ளாது.
இதையும் படிங்க : தோனி ஒரு மேதை..எனக்கு நல்லா தெரியும்.. சிஎஸ்கே அவர் விஷயத்துல இதைத்தான் பண்ணும் – மைக்கேல் கிளார்க் பேட்டி
இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, ஐபிஎல் சேர்மேன் மற்றும் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் ஆகியோர் தலைமையில் விரைவில் இது குறித்து கூட்டம் நடைபெற இருக்கின்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் வீரர்களை வாங்குவதற்கான தொகை அதிகரிக்கப்படும் எனவும், மெகா ஏலத்தில் தக்க வைக்கும் வீரர்களின் எண்ணிக்கை, மேலும் ஏலம் தொடர்பான இடம் மற்றும் தேதி ஆகியவை முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.