“ஸ்டூவர்ட் பிராட் 6 சிக்ஸ் கொடுத்தபின் என்ன ஆனாரு தெரியும்ல” – 7 சிக்ஸ் கொடுத்தவருக்கு அட்வைஸ் செய்த ருத்துராஜ் கெய்க்வாட்!

0
2407

ஒரே ஓவரில் 7 சிக்சர் கொடுத்தவருக்கு அறிவுரை கூறியிருக்கிறார் ருத்துராஜ் கெய்க்வாட்.

நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரின் கால் இறுதிப் போட்டியில் இரட்டை சதம் அடித்தது மட்டுமல்லாது, ஒரே ஓவரில் 7 சிக்ஸ் அடித்து உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இளம் துவக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்.

- Advertisement -

உத்தர பிரதேசம் அணியுடன் நடந்த கால் இறுதி போட்டியில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய கேப்டன் ருத்துராஜ் 220(141) ரன்கள் அடித்தார்.

காலிறுதி போட்டியில் 49வது ஓவரை சிவா சிங் என்பவர் வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் நோ பால் வீசப்பட்டது. அதிலும் அடிக்கப்பட்ட சிக்ஸர் உட்பட மொத்தம் ஏழு சிக்ஸர்களை விளாசி, ஒரே ஓவரில் 43 ரன்கள் அடித்தார் ருத்துராஜ். இதன் மூலம் புதிய உலக சாதனையை நிகழ்த்தி காட்டி இருக்கிறார்.

இத்தனை வருடமாக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளில் இது போன்று எவரும் நிகழ்த்தியது இல்லை. இதுவரை 6 சிக்ஸர்கள் மட்டுமே அதிகபட்சமாக ஒரு ஓவரில் அடிக்கப்பட்டது. 7 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதன் காரணமாக உலகெங்கில் இருந்தும் இவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

- Advertisement -

அனைவரும் ருத்துராஜ் அடித்ததை மட்டும் புகழ்ந்து வந்தோம். ஆனால் ருத்துராஜ் அந்த பவுலரின் மனநிலையை புரிந்து கொண்டு அவருக்கு சில அறிவுரைகளை தற்போது கூறி இருக்கிறார்.

“ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்கள் அடித்த பிறகு எனக்கு குவிந்த பாராட்டுகளுக்கு நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. தற்போது வரை பாராட்டுக்கள் நிற்காமல் வந்து கொண்டே இருக்கிறது. அதற்காகவும் நான் செய்த இந்த சாதனைக்காகவும் பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.

அதே நேரம் பந்துவீச்சில் ஏழு சிக்ஸர்கள் கொடுத்த சிவா சிங், எப்படி தற்போது மனமடைந்திருப்பார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதற்காக அவர் எக்காரணம் கொண்டும் கவலை கொள்ள வேண்டாம். அன்றைய நாள் அவருடையதாக இல்லை.

சர்வதேச போட்டிகளில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்கள் அடித்த பின், ஸ்டூவர்ட் பிராட் மனம் உடையவில்லை. தனது பயிற்சியை இன்னும் தீவிரமாக்கி டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள் என அனைத்திலும் தொடர்ந்து விக்கெட்டுகளை கைப்பற்றி வந்து தற்போது லெஜெண்டாக மாறியிருக்கிறார்.

ஆகையால் உங்களது எதிர்காலமும் இத்துடன் நிற்கவில்லை. இதை பாடமாக எடுத்துக் கொண்டு இன்னும் மேலும் மேலும் உயரத்திற்கு செல்ல வேண்டும். உங்களின் எதிர்காலத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என்றார்.