பும்ராவுக்கு பதிலா இவரை கொண்டு போங்க; எதிர் அணிகள் நடுங்கும் – டேல் ஸ்டெயின் மாஸ் பேச்சு!

0
32227
Steyn

ஆஸ்திரேலியாவில் இந்த மாதம் அக்டோபர் 22ஆம் தேதி துவங்க இருக்கும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க, இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவுக்கு விமானம் ஏறி இருக்கிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை அக்டோபர் 23ஆம் தேதி எதிர்கொள்கிறது!

தற்பொழுது ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பியுள்ள இந்திய அணியில், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இருந்து விலகிய ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக யாரும் இணையவில்லை.

- Advertisement -

ஜஸ்பிரித் பும்ராவின் இடத்தை யாருக்கு தருவது என்ற குழப்பம் இன்னும் இந்திய அணி நிர்வாகத்தில் நீடித்து வருகிறது. முகமது சமி இங்கிலாந்து தொடரோடு கிரிக்கெட் விளையாடவில்லை. மேலும் அவர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு திரும்பி இருக்கிறார். இதனால் அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை.

தீபக் சஹர் நல்ல நிலையில் இருந்தாலும், அவரைப்போலவே பந்துவீசும் புவனேஸ்வர் குமார் அணியில் இருப்பதால் இவரைத் தேர்வு செய்வது பிரச்சனையாக இருக்கிறது. ஆவேஸ் கான் தொடர் வாய்ப்புகளைப் பெற்றிருந்தாலும், அவரது பந்து வீச்சு சிறப்பாக இல்லை.

முகமது சிராஜ் நல்ல ஒரு தீர்வாக இருக்க முடியும். ஆனால் அவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நிர்வாகத்தின் திட்டத்தில் இல்லை. பிரசித் கிருஷ்ணா பவர் பிளேவில் மட்டுமே ஓரளவுக்கு வீசக் கூடியவர். இப்படி பல குழப்பங்கள் நிலவுவதால் ஒரு இறுதி முடிவுக்கு வர முடியாமல் இந்திய அணி நிர்வாகம் இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஜஸ்பிரித் பும்ராவின் இடத்தை யாருக்குத் தருவது மிகச் சரியாக இருக்கும் என்று உலகத்தின் தலைசிறந்த முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தனது அபிப்ராயத்தை தெரிவித்திருக்கிறார்!

இது பற்றி அவர் கூறும் பொழுது
” இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லை என்று கேள்விப்பட்டவுடன் எதிரணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள். அவர் ஒரு அற்புதமான வேகப்பந்துவீச்சாளர். அவர் உலகம் முழுவதும் விளையாடி உள்ள, ஆட்டத்தில் தாக்கத்தை உண்டாக்கக்கூடிய வேகப்பந்துவீச்சாளர். அவர் தனது திறமைகளை ஒரு புள்ளியில் குவித்து சிறப்பாகச் செயலாற்றி இருக்கிறார். இந்தியா அவரைப் பெரிதும் நம்பி இருந்தது. அவர் தற்போது இல்லாதது வருத்தம் அளிக்கிறது. ஒரு பார்வையாளனாக சென்று அவரது ஆட்டத்தை பார்க்க நான் விரும்பினேன் ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய டேல் ஸ்டெய்ன் ” நான் அவருக்காக வருந்துகிறேன். தற்பொழுது அவரது இடத்திற்கு அவரைப்போன்ற அனுபவமுள்ள ஒரு வீரரை நான் பார்ப்பேன். அனேகமாக அவர் முகமது சமியாகத்தான் இருப்பார். இவரும் உலகம் முழுவதும் சுற்றி கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். இவரால் பந்தை ஸ்விங் செய்ய முடியும். தேவைப்படும் பொழுது பந்தின் வேகத்தை அதிகரிக்கவும் முடியும். இந்திய அணியில் வேறுசில வேகப்பந்து வீச்சாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் முகமது சமி நல்ல உடல் தகுதியுடன் இருந்தால், எதிரணியினர் அவரை கண்டு பயப்படுவார்கள் ” என்று கூறியிருக்கிறார்!