டி20 உலகக்கோப்பை: செமி-ஃபைனலுக்கு இந்த 4 அணிகள் தான் முன்னேறும் – அடித்து சொல்லும் முன்னாள் கேப்டன் கங்குலி!

0
2929

டி20 உலக கோப்பையில் அரை இறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகளை கணித்துள்ளார் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி.

8வது டி20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 16ஆம் தேதி துவங்கி, தகுதி சுற்றுகள் முடிவடைந்துள்ளது. நெதர்லாந்து இலங்கை அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

- Advertisement -

அக்டோபர் 22ஆம் தேதி துவங்கிய சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் நியூசிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது. அதற்கு அடுத்ததாக இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இன்று அக்டோபர் 23ஆம் தேதி 13வது போட்டி மற்றும் நான்காவது சூப்பர் 12 போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியாவிற்கு இது முதல் போட்டி என்பதால் வெல்வதற்கு முழு முனைப்புடன் தயாராகி வருகிறது.

இப்போட்டியில் மழையின் குறுக்கீடு இருக்கும் என்றும் வானிலை அறிஞர்கள் தெரிவித்துள்ளதால் கூடுதல் அச்சமும் நிலவி வருகிறது.

- Advertisement -

பரபரப்பு ஏற்படுத்தி வரும் உலகக் கோப்பை தொடரில் எந்த அணி நன்றாக செயல்படும்? எந்த அணி உலககோப்பை இறுதிபோட்டிக்கு முன்னேறும்? யார் மிகச் சிறப்பாக பேட்டிங்கில் செயல்படுவார்? பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர் யார்? என்று பல்வேறு கணிப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.

அந்த வகையில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கணித்துள்ளார்.

“உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் எந்த அணி எப்போது எழுச்சி பெற்று சிறப்பாக செயல்படும் என்று எவராலும் கணிக்க முடியாது. ஆனால் பலம் பொருந்திய அணிகள் ஒருபோதும் தனது தரத்தை குறைத்துக் கொள்ளாது. கத்துக்குட்டி அணி பெரிய அணி என்று உலக கோப்பை தொடரில் பிரித்துப் பார்க்க முடியாது.

சந்தேகத்திற்கு இடமின்றி இந்திய அணி கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இருக்கிறது. ஆஸ்திரேலிய மைதானத்தை வைத்து பார்க்கையில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும்.

தென் ஆப்பிரிக்கா அணியை பலரும் குறைத்து எடை போடுகிறார்கள். அவர்களின் பந்துவீச்சு மிகச்சிறப்பாக இருப்பதால் ஆஸ்திரேலிய மைதானங்களில் நன்றாக ஈடுபடும். மிகப்பெரிய தாக்கத்தையும் அவர்களால் ஏற்படுத்த முடியும்.”என்றார்.

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை பற்றி கருத்து தெரிவித்த கங்குலி, “இந்திய அணி பந்துவீச்சில் பின்னடைவை சந்திக்கவில்லை. இளம் வீரர்கள் தொடர்ந்து நல்ல பங்களிப்பு கொடுத்து வருகிறார்கள். விக்கெட்டுகளை எடுக்கிறார்கள். ஆஸ்திரேலிய மைதானங்களில் பவர்-பிளே ஓவர்களில் விக்கெட் எடுப்பது மிகவும் முக்கியம். அதை சரியாக செய்யும் பட்சத்தில் இந்தியாவின் கை ஓங்கி நிற்கும்.” என்றார்.