சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் ; தேவ்தத் படிக்கல் அபார சதம்!

0
352
SMAT

2022-2023 ஆம் ஆண்டு, இந்திய உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் இன்று துவங்கி நவம்பர் 5ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது!

இந்தத் தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. ஏ பி சி இந்த 3 குழுவில் ஒரு குழுவிற்கு எட்டு அணிகள் வீதமும், டி இ குழுவில் ஏழு அணிகள் வீதம் மொத்தம் முப்பத்தி எட்டு அணிகள் விளையாடும். இதில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இடத்தைப் பிடிக்கும் அணி காலிறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும். இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிகள் காலிறுதி சுற்றுக்கான தகுதி சுற்று விளையாடி முன்னேறும்.

பின்பு இதிலிருந்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி நடத்தப்பட்டு சாம்பியன் அணி தேர்வாகும். இந்தியாவில் இந்தூர் ஜெய்ப்பூர் ராஜ்கோட் கொல்கத்தா லக்னோ மொகாலி ஆகிய 6 நகரங்களில் இந்தத் தொடர் நடத்தப்படுகிறது. தமிழக அணி இ பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இன்று சையது முஷ்டாக் அலி தொடரின் ஒரு போட்டியில் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதிக்கொண்டன. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற மகாராஷ்டிரா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

கர்நாடக அணிக்காக துவக்கம் தர இந்திய அணிக்காக விளையாடி உள்ள பிரபல வீரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் தேவ் தத் படிக்கல் இருவரும் களமிறங்கினார்கள். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்கள். கேப்டன் மயங்க் அகர்வால் 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதற்கு அடுத்து இந்திய அணிக்கு விளையாடிய இன்னொரு பிரபல வீரர் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இதற்குப் பிறகு கர்நாடக அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர ஆரம்பித்தது. ஒரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் அபாரமாக சதமடித்தார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 62 பந்துகளில் 124 ரன்கள் குவித்தார். இதில் 14 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடக்கம்.
இன்னொரு முனையில் இவருக்கு சரியான ஒத்துழைப்பு தந்த மனிஷ் பாண்டே 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் கர்நாடக அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது.

இதற்கு அடுத்து களமிறங்கிய மகாராஷ்டிரா அணியில் முதல் ஆறு பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. பந்துவீச்சாளர் திவ்யாங் மட்டும் 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் மகாராஷ்டிரா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 98 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடக அணி சையது முஷ்டாக் அலி தொடரில் முதல் வெற்றியை மிகப்பெரிய வெற்றியாக பதிவு செய்தது!