சையத் முஷ்டாக் அலி டி20; ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி சதம்; இறுதிகட்டத்தில் பேயாட்டம்!

0
4877
SMAT

இந்திய உள்நாட்டு டி20 லீக்கான சையது முஷ்டாக் அலி டிராபி நேற்று தொடங்கி இந்தியாவின் ஆறு நகரத்தில் நடந்து வருகிறது. இதன் இறுதிப் போட்டி நவம்பர் 5ஆம் தேதி நடக்கிறது!

இந்த தொடரில் மொத்தம் முப்பத்தி எட்டு அணிகள் ஐந்து பிரிவுகளாக பிரிந்து விளையாடுகின்றன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாகக் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

- Advertisement -

ஒவ்வொரு குழுவிலும் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி சுற்றில் விளையாடி அதில் வென்று வரும். இதிலிருந்து 8 அணிகள் காலிறுதி விளையாடி அதிலிருந்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும்.

தொடரின் இரண்டாம் நாளான இன்று மகாராஷ்டிரா அணி சர்வீசஸ் அணியை பஞ்சாப் மொகாலி மைதானத்தில் எதிர்கொண்டது. இந்த ஆட்டத்திற்கு மகாராஷ்டிரா அணிக்கு, இந்திய அணியில் இருந்து திரும்பிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராகுல் திரிபாதி இருவரும் இணைந்தனர்.

முதலில் பேட் செய்த மகாராஷ்டிரா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் யாஷ் நகர் ஒரு ரன்னில் வெளியேறினார். ஆனால் கேப்டனும் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான ருத்ராஜ் கெய்க்வாட் நிலைத்து நின்று கொஞ்சம் பொறுமையாக விளையாடி அரைசதம் அடித்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 20 பந்தில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

மகாராஷ்டிரா அணி 16 ஓவர்களில் 112 ரன்கள் எடுத்திருந்தது. இந்தநிலையில் ருதுராஜ் 43 பந்துகளில் 60 ரன்கள் அடித்திருந்தார். இதற்குப் பிறகுதான் அவரது ஆட்டத்தில் அனல் பறக்க ஆரம்பித்தது. மேற்கொண்டு 22 பந்துகளை மட்டுமே சந்தித்த ருதுராஜ் அதில் 52 ரன்கள் அடித்து நொறுக்கினார். மொத்தம் 65 பந்துகளில் 112 ரன்களை 12 பவுண்டரி மற்றும் 5 சிக்சருடன் எடுத்தார். இவரைத் தவிர அணிக்கு யாரும் பெரிதாக ரன்கள் கொண்டுவரவில்லை. 20 ஓவர்கள் முடிவில் மகாராஷ்டிரா அணி 185 ரன்களை 6 விக்கெட் இழப்பிற்கு எடுத்தது. இதையடுத்து சர்வீசஸ் அணி விளையாடி வருகிறது.

நேற்று கர்நாடக அணியுடன் மகாராஷ்டிரா அணி மோதிய போட்டியில் கர்நாடக அணியின் தேவ்தத் படிக்கல் சதம் விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தின் போது மகாராஷ்டிர அணியில் ருதுராஜ் மற்றும் ராகுல் திரிபாதி இருவரும் இணையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது!

எதிர்கால கிரிக்கெட் டி20 கிரிக்கெட் வடிவத்தில்தான் இருக்கிறது என்று கிரிக்கெட் வல்லுனர்களும் கருதுகிறார்கள். வகையில் எடுத்துக் கொண்டால் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பிரகாசமாகவே இருக்க செய்கிறது!