“சூரியகுமார் யாதவுக்கு அப்போது 18-19 வயது; ஆனால்…” – நினைவுகூர்கிறார் ரிக்கி பாண்டிங்!

0
6329
Suryakumaryadav

இன்று இந்திய அணியில் குறிப்பாக இந்திய டி20 அணியில் மிக முக்கியமான வீரர் என்றால் அது சூர்யகுமார் யாதவ்தான். மேலும் தற்போதைய டி20 கிரிக்கெட்டில் பேட்டிங்கில் நடு வரிசையில் வந்து எதிர் அணியின் மொத்த திட்டங்களையும் கலைத்துப் போட்டு விடக்கூடிய திறமை இருக்கின்ற ஒரே வீரர் இவர் என்று தாராளமாகக் கூறலாம். இவரிடம் அத்தனை வகையான ஷாட்கள் இருக்கிறது. அதை மிகச் சரியான நேரங்களில் மிகச்சரியான திசைகளில் அடித்து அணிக்கு வலு சேர்க்கிறார்.

உள்நாட்டு போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வந்த இவரை முதன்முதலில் 2013 ஆம் ஆண்டு மும்பை அணி ஐபிஎல் தொடரில் வாங்கியிருந்தது. ஆனால் அந்தத் தொடரின் போது இவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதற்கு அடுத்த ஆண்டு இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மாறினார். அந்த அணியில் இருந்து தான் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. அதனால்தான் 2018ஆம் ஆண்டு மும்பை அணி இவரை வாங்கியது.

- Advertisement -

மும்பை அணிக்கு மீண்டும் வாங்கப்பட்ட சூரியகுமாரின் ஆட்டம் வேறொரு உயரத்தில் இருந்தது. 2020 மற்றும் 21 ஆண்டுகளில் 512 மற்றும் 424 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை இந்த ஆண்டு வெளியே விட்டு, இவரை தக்க வைக்கும் அளவுக்கு இவர் முக்கியமான வீரராக மும்பை அணியில் மாறியிருந்தார்.

சூரியகுமார் யாதவை முதன்முதலில் 2013 ஆம் ஆண்டு மும்பை அணியில் பார்த்த நிகழ்வை தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நினைவுகூர்ந்து இருக்கிறார். சூரியகுமார் வெளியில் தெரிந்தது மும்பை அணிக்கு மீண்டும் வந்தபொழுது கிடையாது, அவரை கொல்கத்தா அணி வாங்கிய பொழுதுதான் நடந்தது என்று ரிக்கி பாண்டிங் நம்புகிறார்.

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறும்பொழுது ” நான் மும்பை அணியில் இருந்த பொழுது அவர் பதினெட்டு பத்தொன்பது வயது சிறுவன். அப்பொழுது அவர் ஒரு இளைஞர். அவர் எங்கள் அணியில் இருந்தார். அவருக்கு அப்போது ஆட்டம் நன்றாக அமையவில்லை. நான் சென்ற அதே வருடம் அவர் 2014ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கிருந்துதான் அவரது கேரியர் தலைகீழாக மாறத் தொடங்கியது. கொல்கத்தா அணியின் பேட்டிங் மிடில் ஆர்டரில் அவருக்கு கொஞ்சம் வாய்ப்புகள் கிடைத்தது. பின்னர் மும்பை அணி அவரை மீண்டும் ஏலத்தில் வாங்கியது. இப்போது அவர் ஒரு நான்கைந்து சீசன்களாக ஐபிஎல் தொடரில் மேட்ச் வின்னர் வீரராக இருந்து வருகிறார். தக்க வைக்கப்பட்ட வீரர்களில் இவர் தான் மிகவும் தாக்கம் நிறைந்த வீரராக இருக்கிறார் ” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடர் முடிந்த போது அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் “சூரியகுமார் மிகவும் திறமையான வீரர். அவர் வருகின்ற டி20 உலக கோப்பையில் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன் ஆக இருப்பார்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது!