2022 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் – காரணம் இதுதான்

0
570
Suryakumar Yadav MI

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் மும்பை அணி பல சாதனைகளைப் படைத்து வருகிறது. ஆனால் எல்லாச் சாதனைகளுமே மோசமான சாதனைகள். இதுவரை நடந்த ஒட்டுமொத்நா ஐ.பி.எல் தொடர்களில் எந்தவொரு அணியும் முதல் எட்டு ஆட்டங்களைத் தோற்றிருக்காத பொழுது, மும்பை அந்த மோசமான சாதனையைச் செய்தது. அது மட்டுமே இல்லாமல் மும்பை அணி ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாய் செய்த மோசமான சாதனைகள் என்று பெரிய பட்டியலே உண்டு.

மும்பையின் இந்த மிகப்பெரிய சரிவுக்கு துவக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஆகியோரின் மோசமான பேட்டிங் பார்ம் மட்டுமே காரணமாக அல்லாமல், மும்பை அணி ஏலத்தில் செயல்பட்ட விதமும் ஒரு முக்கியக்காரணம். மும்பை ஏலத்தில் பொலார்ட் இருக்க டிம் டேவிட்டை அணிக்குள் கொண்டு வர எட்டு கோடிகளைச் செலவழித்தது, ஆடாத ஆர்ச்சருக்கு எட்டு கோடியை செலவழித்தது, இஷான் கிஷனுக்கு 15 கோடியைச் செலவழித்தது என பணத்தை இரைத்து, நல்ல பவுலர்களை வாங்க முடியாமல் சிக்கிக்கொண்டது.

இதெல்லாம் சேர்த்து மும்பை அணியைத் தொடர் தோல்விகளுக்குள் தள்ள, மும்பை அணி நிர்வாகம் பழைய மும்பை வீரரான வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னியையும், குமார் கார்த்திக்கேயா என்ற புது சுழற்பந்து வீச்சாளரையும் அணிக்குள் கொண்டுவந்தது. மேலும் வேகப்பந்த வீச்சாளர் டைமல் மில்ஸ் காயமடைய அவருக்குப் பதிலாக தென்ஆப்பிரிக்க மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன் டிரிஸ்டன் ஸ்டப்சை கொண்டுவந்தது.

முதல் எட்டு ஆட்டங்களைத் தோற்ற மும்பை அணி, சிற்சில மாற்றங்களோம், துவக்க ஆட்டக்காரர்களின் சராசரி பங்களிப்புகளாலும், இப்பொழுதுதான் இரண்டு தொடர் வெற்றிகளைப் பெற்றிருந்தது. இந்த நிலையில் மும்பை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் முன்கை காயத்தால், நடப்பு ஐ.பி.எல் தொடரிலிருந்து முழுதாய் வெளியேறுவதாய் செய்தி வந்துள்ளது. இது மும்பை அணியை மேலும் மேலும் பலகீனமாக்கும் என்பதில் சந்தேகமில்லை!