‘யப்பா.. எல்லா பக்கமும் அடிக்கிறாரு’ ரோகித் சர்மா, விராட் கோலியைவிட, சூர்யாவுக்கு பவுலிங் பண்றது ரொம்ப கஷ்டமா போச்சு – நெதர்லாந்து பவுலர் பேட்டி!

0
4769

சூரியகுமார் யாதவிற்கு பவுலிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது என்று சமீபத்திய பேட்டியில் நெதர்லாந்து பவுலர் வேன் மேக்கரின் பகிர்ந்து கொண்டார்.

இந்திய அணி டி20 உலக கோப்பையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்றின் இரண்டு போட்டிகளில் முடிவில் இந்திய அணி இரண்டையும் கைப்பற்றி குருப் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

- Advertisement -

சிட்னி மைதானத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இம்முறை இந்திய அணி அதே பிளேயிங் லெவனில் விளையாடியது.

துவக்க வீரர் கேஎல் ராகுல் ஒன்பது ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சேர்ந்து 73 ரன்கள் அடித்தனர். இதில் ரோகித் சர்மா 53 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் வந்த சூரியகுமார் தனது இயல்பான அதிரடியை வெளிப்படுத்தி மளமளவென அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் இவருக்கு பக்கபலமாக இருந்த விராட் கோலியும் கடைசி கட்டத்தில் தனது அதிரடியை வெளிப்படுத்த தொடங்க, அணியின் ஸ்கொர் 150 ரன்களை கடந்தது.

- Advertisement -

அரை சதம் அடித்த விராட் கோலி, 44 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். சூரியகுமார் யாதவ் 25 பந்துகளில் 51 ரன்கள் அடிக்க, இருவரும் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து இருந்தது.

மூன்றாவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 95 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு வந்த நெதர்லாந்து வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதிகபட்சமாக டிம் பிரிங்ளே 15 பந்துகளில் 20 ரன்கள் அடித்திருந்தார். மற்ற வீரர்கள் எவரும் 20 ரன்கள் கடக்கவில்லை.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார், அர்ஷதிப் சிங், அக்ஷர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்களை எடுத்திருந்தது நெதர்லாந்து.

56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தனது குரூப்பின் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

போட்டி முடிந்த பிறகு நட்சத்திர பந்துவீச்சாளர் வேன் மேக்கரின் இந்திய அணியில் யாருக்கு பந்து வீசியது மிகவும் கடினமாக இருந்தது என்று மனம் திறந்து பேசி உள்ளார் அவர் தனது பேட்டியில் கூறுகையில்,

கடந்த ஒரு வருடமாக சூரியகுமார் யாதவை நாங்கள் கவனித்து வருகிறோம். அபாரமாக விளையாடி வருகிறார். குறிப்பாக அவரைப் போன்று காலை சற்று விரித்த நிலையில் பந்து எதிர்கொள்ளும் வீரருக்கு, பந்து வீசுவது மிகவும் கடினம். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்றவர்கள் பாரம்பரிய முறைப்படி நின்று விளையாடுகின்றனர். ஆனால் சூரியக்குமார் அப்படி இல்லை.

ரோகித் சர்மா சிறப்பான சில ஷாட்களை அடித்தார். ஆனால் அவருக்கு பந்து வீசுவது எங்களுக்கு கடினமாக இல்லை. சூரியகுமார் யாதவ் தான் எப்போது எந்த திசையில் பேட்டை திருப்புவார் என்று புரியவில்லை. இது எங்களுக்கு பந்துவீச்சில் மிகவும் கடினமாக இருந்தது. மேலும் கூடுதல் அனுபவத்தையும் கொடுத்திருக்கிறது.” என்றார்.