சூரியகுமார் ருத்ர தாண்டவம் ; டி20 கிரிக்கெட்டில் சாதனை!

0
15486
Sky

ஆஸ்திரேலியாவில் தற்போது நடந்து வரும் எட்டாவது டி20 உலகக்கோப்பையில் ஏற்கனவே அரை இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்ட இந்திய அணி ஜிம்பாப்வே அணியுடன் ஒரு சம்பிரதாய போட்டியில் இன்று மெல்போன் மைதானத்தில் மோதி வருகிறது!

இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதெனத் தீர்மானித்தார். தினேஷ் கார்த்திக் வெளியேற்றப்பட்டு ரிஷப் பண்ட் உள்ளே வந்திருக்கிறார்.

- Advertisement -

வழக்கம்போல் கே எல் ராகுல் முதல் ஓவரை மெய்டன் ஆக்க, இன்னொரு முனையில் ரன் பிரஷர் உருவாக ரோகித் சர்மா ஆட்டம் இழந்தார். கடந்த ஆட்டத்தை போலவே இந்த ஆட்டத்திலும் சுதாரித்து சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் அரை சதம் அடித்தவுடன் ஆட்டம் இழந்தார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி 25 பந்துகளுக்கு 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து முதல் முறையாக இந்த உலகக் கோப்பை தொடருக்கு வந்த ரிஷப் பண்ட் மூன்று ரன்கள் வெளியேறினார்.

இன்னொரு முனையில் சூரிய குமார் யாதவ் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், அவருடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தை அவர் ஆடிக் கொண்டிருந்தார். வழக்கம்போல் பந்துகள் மைதானத்தின் எல்லாப் பக்கத்திற்கும் காற்றிலும் தரையிலும் எல்லைக்கோட்டை தாண்டி கடந்து கொண்டிருந்தன.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் ஆடிய ஆட்டத்தை எப்படித் தடுப்பது என்று ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களுக்கு எதுவுமே புரியவில்லை. அவர்கள் களத்தடுப்பு வியூகத்தை மாற்ற மாற்ற அதற்கு ஏற்றார் போல் சூரியகுமார் யாதவும் தான் அடிக்கும் திசைகளையும் மாற்றிக் கொண்டே இருந்தார். இறுதிவரை களத்தில் நின்ற சூரியகுமார் யாதவ் 25 பந்துகளில் 64 ரன்களை ஆறு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர் உடன் வெளுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 186 ரன்கள் குவித்தது!

இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் சூரியகுமார் யாதவ் ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனைக்கும், ஒரு ஆண்டில் அதிக டி20 கிரிக்கெட் ரன்கள் குவித்த இந்திய வீரர் என்கின்ற சாதனையையும் படைத்திருக்கிறார். சூரியகுமார் யாதவ் தற்போது வரை இந்த ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் மொத்தம் 1026 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் இந்த ஆண்டு மட்டும் டி20 கிரிக்கெட்டில் 50 ரன்கள் தாண்டி பத்து முறைக்கு அடித்திருக்கிறார்.

இதில் உலகச் சாதனையாக கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 1326 ரன்கள் குவித்திருந்ததும், 13 முறை 50க்கும் மேற்பட்ட ரண்களை ஒரு ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் கடந்திருந்ததும் உலகச் சாதனையாக இருக்கிறது. இதை முறியடிக்கவும் சூரியகுமார் யாதவுக்கு தற்போது வாய்ப்புகள் இருக்கிறது.

தற்போது இந்த உலகக் கோப்பை தொடரில் சூரியகுமார் யாதவ் 5 ஆட்டங்களில் மூன்று அரை சதங்களுடன் 73 ரன் சராசரியில் மொத்தம் 219 ரண்களை 190.43 ஸ்ட்ரைக் ரைட்டில் குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது!