டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் சூரியகுமார் அரைசதம்; இந்திய அணி…?

0
748
Sky

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணியுடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை முடித்துக் கொண்டு, ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு விமானம் ஏறியது.

இங்கிருந்து கிளம்பிய இந்திய அணி மேற்கு ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள பெர்த் மைதானத்தில் முதற்கட்ட பயிற்சிகளை ஆரம்பித்த இந்திய அணி, மேற்கு ஆஸ்திரேலிய அணியோடு இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.

- Advertisement -

இந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஒரு போட்டி இன்று பெர்த் மைதானத்தில் ஆரம்பித்தது. இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

இந்திய அணியில் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இடம்பெறவில்லை. இந்திய அணியில் ரோகித்சர்மா, ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, சூரியகுமார், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்சல் படேல், புவனேஸ்வர் குமார், அர்ஸ்தீப் மற்றும் சாகல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்திய அணிக்கு துவக்கம் தர களம் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்களில் வெளியேறினார். மற்றுமொரு துவக்க ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் 17 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மூன்றாவது வீரராக களமிறங்கிய தீபக் ஹூடா 14 பந்துகளில்22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆட்டத்தின் பத்தாவது ஓவரில் போது இந்திய அணி 73 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. இந்தச் சூழலில் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் மிகச் சிறந்த பேட்டிங் பார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் இந்தப் போட்டியிலும் அசத்தலாக விளையாடி அரைசதம் அடித்தார். சூரியகுமார் 32 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்தார். இவருடன் இணைந்து விளையாடிய ஹர்திக் பாண்டியா 20 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.

இவர்கள் இருவரும் ஆட்டமிழந்து வெளியேறிய பிறகு கடைசி கட்டத்தில் வந்த தினேஷ் கார்த்திக் 18* ரன்கள் மற்றும் ஹர்சல் படேல் 6* ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் ஆர்டர் சரியாக விளையாடாத காரணத்தால் ரன் ரேட் குறைந்துள்ளது!