யாரும் எட்ட முடியாத உயரத்தில் சூரியகுமார்; டி20 கிரிக்கெட் சூரியகுமாரின் சொந்தம்!

0
2801
Sky

இந்திய கிரிக்கெட்டில் டி20 வடிவத்தில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக உருவாக்கிக் கொண்டிருக்கிறார் சூரியகுமார் யாதவ். நேற்று இலங்கைக்கு எதிராக தொடரை நிர்ணயிக்கும் டி20 போட்டியில் 51 பந்துகளில் 112 ரன்கள் ஆட்டம் இழக்காமல் நொறுக்கி தள்ளி, இந்த வடிவ கிரிக்கெட்டில் அவர் இன்னும் தன்னை முன்னே கொண்டு போய் நிறுத்தி இருக்கிறார்!

சூரியகுமார் யாதவ் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக டி20 யில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2021 ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி அறிமுகம் ஆனார். அவருக்கு அந்த ஆண்டு பெரிய அளவில் அமையவில்லை. ஆனால் அறிமுக போட்டியிலேயே அபாயகரமான வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர் வீசிய, தான் சந்தித்த முதல் பந்தை சிக்ஸருக்கு அனாயாசமாக அடித்து தன் வருகையை அறிவித்தார்!

- Advertisement -

2021 ஆம் ஆண்டுக்கு மாறாக 2022 ஆம் ஆண்டு அவருக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்தது. ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் அவருக்கு அவரது இயல்பான ஆட்டத்தை எந்த நேரத்திலும் வெளிப்படுத்த சுதந்திரம் வழங்கப்பட்டதோடு டி20 கிரிக்கெட்டில் தொடர் வாய்ப்புகள் அளிக்கப்பட்டது.

இதனைத் டி20 கிரிக்கெட்டில் அவரது வேகம் அதிகரித்தது. கடந்த ஆண்டு நடந்து முடிந்த டி20 கிரிக்கெட்டுக்கு முன் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில், டி20 கிரிக்கெட்டிலும் தனது சர்வதேச கிரிக்கெட்டிலும் முதல் சதத்தை இங்கிலாந்து அணிக்காக பதிவு செய்து அசத்தினார். இதற்கு அடுத்து நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரராக வந்தார். இந்தத் தொடரில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் மைதானத்தில், அசத்தலான வேகப்பந்து வீச்சு கூட்டணியை வைத்திருந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் அடித்த ஒரு அதிரடி அரை சதம், அவரின் பேட்டிங் எவ்வளவு சர்வதேச தரமானது என்பதை காட்டியது!

இதற்கு அடுத்து கடந்த ஆண்டின் முடிவில் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் அந்த அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தை தனது வித்தியாசமான ஷாட்கள் மூலம் கொண்டு வந்து கிரிக்கெட் உலகத்தை வியக்க வைத்தார். அவரது சூறாவளி ஆட்டத்தைக் கண்ட நியூசிலாந்து வீரர்கள் மட்டுமல்லாமல் மேக்ஸ்வெல் போன்ற உலக கிரிக்கெட் வீரர்களும் அவரது ஆட்டத்தை வியந்து புகழ்ந்து தங்களது பாராட்டுகளை தெரிவித்தார்கள்!

- Advertisement -

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அவருக்கு மிகச் சிறப்பானதாக ஆரம்பித்திருக்கிறது. நேற்று இலங்கை அணிக்கு எதிராக தொடரை முடிவு செய்யும் போட்டியில் அவர் ஆடிய ஆட்டம் இந்திய டி20 கிரிக்கெட்டில் மட்டும் அல்ல அது உலக டி20 கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் சூரியகுமார் தான் என்பதை ஆணித்தரமாக அறிவிக்கும் படியாக அமைந்தது!

ஒரு சின்ன புள்ளி விபரம் அவர் டி20 கிரிக்கெட்டில் எப்படியான அசாத்திய பேட்டிங்கை செய்து வருகிறார் என்பதை உணர்த்தும். அதாவது 180 ஸ்ட்ரைக் ரேட்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த நான்கு பேர் கொண்ட புள்ளிவிபரம் தான் அது.

சூரியகுமார் யாதவ் – இந்தியா – 1578 ரன்கள்
ஹசன் அலி – பாகிஸ்தான் – 129 ரன்கள்
மைக்கேல் பிரேஸ்வெல் – நியூசிலாந்து – 90 ரன்கள்
ஸ்காட் குக்ளேய்ன் – நியூசிலாந்து – 79 ரன்கள்