கடைசி ஓவரில் 4 சிக்சர்கள்;  மொத்தம் 6 பவுண்டரி 6 சிக்சர்கள்; சூரியகுமார் யாதவ் அசத்தல்!

0
171
S K Y

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 15வது ஆசிய கோப்பை போட்டியில் இன்று இந்திய அணியும் ஹாங்காங் அணியும் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதி வருகின்றன. போட்டியில் வென்றால் இந்திய அணி 2-வது சுற்றுக்கு தகுதி பெறும்!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஆங்காங் அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரு மாற்றமாக கடந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.

- Advertisement -

இந்தியாவின் இன்னிங்சை பேட்டிங்கில் துவங்க துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவுடன் கேஎல் ராகுல் களமிறங்கினார். அதிரடியாக ஆரம்பித்த கேப்டன் ரோகித் சர்மா 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து கேஎல் ராகுல் உடன் விராட் கோலி களமிறங்கினார். இவர்கள் இருவரும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஐம்பத்தி ஆறு ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ஆனால் பெரிதாக ரன் வேகம் எதுவும் இல்லை. ராகுல் இறுதியாக 39 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆனால் இதற்குப் பிறகு சூரியகுமார் வந்து விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்ததும் ஆட்டத்தில் அனல் பறக்க ஆரம்பித்தது. ஒரு முனையில் சூரியகுமார் யாதவ் 360 டிகிரியில் ஹாங்காங் பந்துவீச்சாளர்களை சிதற விட்டார். இன்னொரு முனையில் விராட்கோலி அவருக்கு சரியான ஒத்துழைப்பை தந்ததோடு அவ்வப்போது சில பவுண்டரி சிக்சர்களை விளாசினார். சீராக விளையாடிய விராட் கோலி 40 பந்துகளில் அரைசதம் அடித்து ரசிகர்களை நிம்மதி அடைய வைத்தார். இது அவருக்கு 31ஆவது டி20 அரை சதம் ஆகும். அரை சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் ஆவரேஜ் 50 இற்கு மேல் வைத்திருந்த ஒரே பேட்ஸ்மேன் விராட் கோலி. சில நாட்களுக்கு முன்பு டி20 போட்டியில் அவரது சராசரி நாற்பத்தி ஒன்பதுக்கு குறைந்தது. இந்த போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் அவரது சராசரி மீண்டும் 50ஐ தாண்டிவிட்டது.

இன்னொரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 22 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் அரை சதத்தை விளாசினார். ஆனால் அத்தோடு நிற்காமல் அவரது அதிரடி தொடர்ந்தது. கடைசி ஓவரில் மட்டும் 4 சிக்சர்களை விளாசினார். இறுதியாக சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 68 ரன்களை குவித்தார். விராட் கோலி 44 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். சரியாக நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் முடிவில் இந்திய அணி 192 ரன்கள் எடுத்தது.