2022 ஐபிஎல் தொடரில் இந்த 5 வீரர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள் – முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா நம்பிக்கை

0
92
Suresh Raina

ஐபிஎல் தொடர் ஆரம்பித்த 2008 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலும் அதன் பின்னர் 2018 முதல் கடந்த ஆண்டு வரையிலும் சென்னை அணிக்கு சுரேஷ் ரெய்னா தொடர்ச்சியாக விளையாடிய ஒரு வீரர். சென்னை சூப்பர் கிங்ஸ் முதன்முதலாக கோப்பையை கைப்பற்றிய 2010ஆம் ஆண்டில் 16 போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 520 ரன்கள் சுரேஷ் ரெய்னா குவித்தார். அதேபோல 2011ம் ஆண்டு 16 போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 438 ரன்கள் குவித்தார். அந்தாண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.

2018 மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே கைப்பற்றிய வருடமும் சுரேஷ் ரெய்னா 15 போட்டிகளில் நான்கு அரைச் சதங்களுடன் 445 ரன்கள் குவித்தார்.
அதேபோல 2008 முதல் 2019ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் 300 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் என்ற பெயருக்கும் இவரே சொந்தக்காரர்.

- Advertisement -

அப்படி சிறப்பாக விளையாடிய சுரேஷ் ரெய்னா கடந்த ஆண்டு சென்னை அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 160 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார்.
அவரது மோசமான பார்ம் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு சென்னை அணி நிர்வாகம் இவரை கைப்பற்றவில்லை, அதுமட்டுமல்லாமல் நடந்து முடிந்த மெகா ஏலத்திலும் இவரை எந்த அணியும் வாங்க முயற்சி கூட செய்யவில்லை. அதன் காரணமாக முதல் முறையாக சுரேஷ் ரெய்னா இந்தாண்டு ஐபிஎல் தொடரில் களம் இறங்கப் போவதில்லை. இருப்பினும் அவர் வர்ணனையாளராக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிய அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் இந்த வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள்

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் சுரேஷ் ரெய்னா தற்போது ஒரு சில வீரர்களின் பெயரை கூறி அவர்கள் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் அவர்கள் பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.

அவர் கூறிய வீரர்கள் மும்பை அணியை சேர்ந்த இஷான் கிஷன், கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சென்னை அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் வீரர்கள் மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்.

- Advertisement -

15 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு நடந்து முடிந்த மெகா ஏலத்தில் விலைபோன இஷா கிஷன் மீது அனைவரின் பார்வையும் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மும்பை அணிக்கு சிறப்பாக விளையாடிய அவர் இந்த ஆண்டும் சிறப்பாக விளையாடுவார் என்று நாம் நம்பலாம். அதேபோல கடந்த ஆண்டு வரை டெல்லி அணியில் விளையாடி வந்த ஸ்ரேயாஸ் இந்த ஆண்டு முதல் முறையாக கொல்கத்தா அணியை தலைமை தாங்குகிறார். கேப்டனாக அதேசமயம் ஒரு வீரராக அவர் எவ்வாறு விளையாடப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது.

மறுபக்கம் இளம் சிங்கம் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் டெல்லி அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து செல்வாரா என்றும் கடந்த ஆண்டு சென்னை அணியில் அதிரடியாக விளையாடிய ஆல்ரவுண்டர் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயின் அலி இருவரும் இந்த ஆண்டும் அதே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்களா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் அனைவருக்கும் உள்ளது.

சுரேஷ் ரெய்னா நம்பிக்கையுடன் கூறியது போல இவர்கள் அனைவரும் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்