ரிஷப் பண்ட்டை ஓப்பனராக களமிறக்க வேண்டும் ! காரணம் இதுதான் – சுனில் கவாஸ்கர்

0
149
Rishabh Pant and Sunil Gavaskar

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்து முதலில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் வரலாற்றுத் தோல்வியைச் சந்தித்தாலும், இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் மற்றும் அரைசதம் அடித்து அசத்தி இருந்தார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷாப் பண்ட். இதனால் தற்போது ஐ.சி.சி-ன் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஐந்தாம் இடத்தைப் பிடித்திருக்கிறார். தற்போது நிலையில் இந்திய பேட்ஸ்மேன்களில் அதிகபட்ச இடத்தில் ரிஷாப் பண்ட்தான் இருக்கிறார்.

தற்போது டெஸ்ட் போட்டிகளில் ஐந்து சதங்கள் அடித்துள்ள ரிஷாப் பண்ட் அதில் நான்கு சதங்களை இங்கிலாந்தில் இரண்டு, ஆஸ்திரேலியா, செளத் ஆப்பிரிக்கா நாடுகளில் தலா ஓன்று என அடித்திருக்கிறார். இந்திய விக்கெட் கீப்பர்களில் இதைச் செய்திருப்பவர் ரிஷாப் பண்ட் மட்டும்தான். ரிஷாப்பின் ஆஸ்திரேலியா கபா டெஸ்ட் இன்னிங்ஸ், அந்த டெஸ்ட் தொடரையே வெல்ல மிக முக்கியக் காரணமாக இருந்தது. அவரது டெஸ்ட் பேட்டிங் கடந்த செளத் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸிலிருந்து மெருகேறி மிகச்சிறப்பாக இருக்கிறது.

- Advertisement -

உண்மையில் ரிஷாப் பண்ட்டிற்குப் பிடித்தமான கிரிக்கெட் வெள்ளைப்பந்து கிரிக்கெட்தான். அதிரடியாய் ஆட்ட சூழல், ஆடுகளத் தன்மை எதையும் கவலைப்படாமல் விளையாடுவதுதான் அவரது இயல்பான பாணி. ஆனால் அவரது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் வெள்ளைப்பந்து போட்டிகளில் அவர் பெரிதாய் சோபிக்கவில்லை என்பதே நிதர்சனம். ஐ.பி.எல் போட்டிகளில் தன்னை நிரூபித்திருந்தாலும், சர்வதேச வெள்ளைப்பந்து போட்டிகளில் அவரால் முடியவில்லை. சமீபத்தில் செளத் ஆப்பிரிக்கா அணியுடனான டி20 தொடரில் நான்கு போட்டிகளில் ஒருமுறைக் கூட அவரால் முப்பது ரன்களை தொட முடியவில்லை. ஒரே மாதிரியான தவறுகளைச் செய்து ஆட்டமிழந்தார்.

ரிஷாப் பண்ட் சர்வதேச வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக நடுவரிசையில் களமிறங்கி விளையாடி வருகிறார். ஆனால் இந்திய அன்டர் 19 அணியில் உலகக்கோப்பையில் துவக்க வீரராகவே களமிறங்கி விளையாடினார். அந்த உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியுடன் நிதானமாக 83 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார். ஆனால் அடுத்து நேபாள் அணியுடனான ஆட்டத்தில் வெறும் 24 பந்துகளில் 78 ரன்கள் குவித்து மிரட்டினார். அடுத்து நமீபியா அணியுடன் 96 பந்துகளில் 111 ரன்கள் குவித்தார். இப்படி வெள்ளைப்பந்து போட்டிகளில் கீழ்மட்டத்தில் துவக்க வீரராக அவரது ஆட்டம் சிறப்பாகவே இருந்து வந்துள்ளது.

தற்போது சர்வதேச வெள்ளைப்பந்து போட்டிகளில் அவர் சறுக்கி வருவதால், இந்திய அணியின் முன்னாள் பிரபல வீரர் சுனில் கவாஸ்கர் ஒரு கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதில் அவர், ரிஷாப் பண்ட்டை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் துவக்க வீரராகக் களமிறக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலியா அணிக்காக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் துவக்க வீரராகக் களமிறங்கி தனது அதிரடியால் சாதித்த விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் செய்ததை ரிஷாப் பண்ட்டும் செய்வார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்!

- Advertisement -