ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறாமல் விளையாடும் போது இந்திய அணிக்காக ஆடும் போது மட்டும் ஏன் ஓய்வு பெறுகிறீர்கள் ? சுனில் கவாஸ்கர் கேள்வி

0
97

இந்திய கிரிக்கெட் அணிக்கான ஒரு கோர் டீமை அமைக்க, புதிய வீரர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அணியின் முக்கிய வீரர்களுக்கு தொடர்களின் நடுவில் ஓய்வளிக்கப்பட்டு வருகிறது. ஒரு நிலையான இந்திய அணி தொடர்ச்சியாய் போட்டிகளில் பங்கேற்று நிறைய மாதங்கள் ஆகிவிட்டது. இந்திய அணி நிர்வாகம் வீரர்களின் பணிச்சுமை, மனச்சுமையைக் குறைக்க இப்படி செய்வதாக வெளியில் கூறப்படுகிறது!

தற்போது இந்திய அணி இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் இருக்கிறது. இதற்கடுத்து மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து டி20 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இன்டீஸ் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் முதலில் விளையாடும் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு ஷிகர் தவானை கேப்டனாக வைத்து ஒரு இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

வெஸ்ட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கு ஷிகர் தவான் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அணியில், இந்திய அணியின் முன்னணி வீரர்கள் யாரும் விளையாடவில்லை. அவர்களுக்கு ஓய்வளிப்பதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிஷாப் பண்ட், ஜஸ்ப்ரீட் பும்ரா ஆகியோர் இந்தத் தொடரில் விளையாடவில்லை.

இப்படி முன்னணி வீரர்களுக்குத் தொடர்ச்சியாய் ஒய்வு அளிக்கப்படுவது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் லெஜன்ட் வீரரான சுனில் கவாஸ்கர் அதிரடியான தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார். பலர் பேசத் தயங்கும் விசயத்தை அவர் கையில் எடுத்துப் பேசியிருப்பது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

சுனில் கவாஸ்கர் தனது பேச்சில் “பாருங்கள் இந்திய அணாக்காக வீரர்கள் விளையாடுவதிலிருந்து ஓய்வெடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நீங்கள் இந்தியாவுக்காக விளையாடுகிறிர்கள். ஐ.பி.எல் விளையாடும் பொழுது ஓய்வெடுக்காமல், இந்திய அணிக்காக விளையாடும் போது ஓய்வு என்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. இந்தியாவுக்காக விளையாடும் பொழுது ஓய்வு பற்றி பேசக்கூடாது. ஒரு டி20 போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 20 ஓவர் மட்டுமே விளையாட வேண்டியுள்ளது. இது உங்கள் உடலைப் பெரிதாய் பாதிக்காது. டெஸ்ட் போட்டிகளில் உடலும் மனமும் சேர்த்து உழைத்துப் பாதிக்கிறது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் இந்தப் பிரச்சினை இல்லை” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய சுனில் கவாஸ்கர் “பி.சி.சி.ஐ இந்த ஓய்வு விசயத்தை கவனிக்க வேண்டும். அனைத்து ஏ கிரேடு வீரர்களும் நல்ல ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார்கள். ஒவ்வொரு போட்டிக்கும் அவர்கள் நல்ல சம்பளத்தைப் பெறுகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணி இன்னும் தொழில்முறையாக மாற வேண்டும். அதற்குச் சரியான விதிகள் வகுக்க வேண்டும். நீங்கள் ஓய்வெடுக்க விரும்பினால், உங்கள் உத்திரவாதங்களைக் குறைக்க வேண்டும். அடுத்து நீங்கள் இந்திய அணிக்காக விளையாடும் பொழுது, எப்படீ ஓய்வு கேட்க முடியும்? அதனால்தான் இந்தக் கருத்தை நான் ஏற்கவில்லை” என்றும் தெரிவித்து இருக்கிறார்!