2022 ஐபிஎல் பிளே ஆப்பிற்குத் தகுதி பெறும் 4 அணிகள் இவை தான் – கவாஸ்கர் மற்றும் ஹைடன் கருத்து

0
1279
Gavaskar and Hayden picks 2022 IPL Playoffs Teams

2022 ஐபிஎல் 15-வது ஆண்டு கிரிக்கெட் திருவிழா கடந்த சனிக்கிழமை துவங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. மொத்தம் 70 லீக் போட்டிகள் மும்பை, புனேவின் நான்கு மைதானங்களில் நடக்கவிருக்க, ப்ளேஆப்ஸ், இறுதிப்போட்டிக்கான இடமும், மைதானமும் இன்னும் முடிவாகாமல் இருக்கிறது. இரண்டு நாட்கள் நடந்த மூன்று போட்டிகளிலேயே ஆட்டத்திற்குள்ளும், முடிவுகளிலும் எதிர்பாராத பல திருப்பங்கள்!

நடந்து மூன்று ஆட்டங்களில், மிகப்பெரிய அளவில் இரசிகர்களையும், வணிகத்தையும் வைத்திருக்கிற மூன்று அணிகளான சென்னை, மும்பை, பெங்களூர் அணிகள் தோல்வியைத் தழுவியிருக்கின்றது. முதல் ஆட்டம் என்பதால் இரசிகர்கள், விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் மத்தியில் இந்த அணிகளின் தோல்விகள் பெரிதாய் அலசப்படாமல் போனாலும், மூன்று தோல்விகளுமே வித்தியாசமானதாய் இருக்கிறது.

சென்னை அணியின் பேட்டிங் மிக வலுவானது ஆனால் அடித்த ரன்கள் 131. பந்துவீச்சு பலகீனமானது ஆனால் 131 ரன்களை கொல்கத்தாவை எளிதாய் அடிக்க விடவில்லை. பெங்களூரு அணியின் பேட்டிங் பலகீனமானது ஆனால் 205 ரன் அடிக்கிறார்கள். பந்து வீச்சு பலமானது ஆனால் 205 ரன்களை 19வது ஓவரிலேயே பஞ்சாப்பை அடிக்க விடுகிறார்கள். மும்பையை விட இன்று ஆடிய டெல்லி அணி எல்லாவற்றிலும் பலகீனமானது. ஆனால் ஒரு ஓவர் மீதம் வைத்து 178 ரன்களை அடித்து ஜெயிக்கிறது. இதையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வதென்றே தெரியவில்லை!

இந்த நிலையில்தான் இந்தியாவின் லெஜன்ட் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரும், ஆஸீதிரேலியாவின் மேத்யூ ஹைடனும் தங்களுடைய ப்ளேஆப்ஸ் அணிகள் எதுவென்று கருத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

சுனில் கவாஸ்கர் தன் ப்ளேஆப்ஸ் அணிகளில் முதல் அணியாய் மும்பையையும், அடுத்து கடந்த சில ஆண்டுகளாக நன்றாகச் செயல்பட்டு வரும் டெல்லியையும், மூன்றாவது அணியாய் நடப்பு சாம்பியன் சென்னையை வீழ்த்திய கொல்கத்தாவையும், நான்காவது அணியாய் சென்னையையும் தேர்வு செய்திருக்கிறார்.

மேத்யூ ஹைடன் தன் பிளேஆப்ஸ் அணிகளில் கவாஸ்கர் நான்காவது இடம் தந்த சென்னை அணியை முதல் அணியாக தேர்வு செய்ததோடு, கவாஸ்கர் முதல் அணியாகத் தேர்வு செய்த மும்பையை இதிலிருந்து வெளியேற்றுவதாக கூறிவிட்டார். அவர் இரண்டாவதாய் டெல்லியையும், மூன்றாவதாய் கொல்கத்தாவையும் கூறியதோடு, நான்காவது அணியாய் பெங்களூர் அணியைத் தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

ஆனால் முன்னாள் பெரிய வீரர்களான சுனில் கவாஸ்கர், சுரேஷ் ரெய்னா, ஹைடன் போன்றவர்களின் தேர்வில் பஞ்சாப் இடம்பெறாதது ஏன் என்று ஆச்சரியமாகவே இருகிறது!