நீங்க வாய மூடிக்கிட்டு இருந்தாலே போதும் ; வெங்சர்க்கார் அசாருதீனுக்கு சுனில் கவாஸ்கர் மறைமுக தாக்கு!

0
87
Gavaskar

கடந்த திங்கள்கிழமை, அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய தேர்வுக்குழு அறிவித்தது. இத்தோடு நான்கு ரிசர்வ் வீரர்களையும் அறிவித்தது.

அணி அறிவிப்புக்குப் பின்னால் எப்பொழுதும் நடக்கும் விமர்சனங்களும் மதிப்பீடுகளும் இந்த முறையும் களைக்கட்டின. அணியில் யார் இருந்திருக்க தேவை இல்லை? யார் இருந்திருக்க வேண்டும்? அறிவிக்கப்பட்டுள்ள அணி எப்படியானது? அணிக்குள் யாருக்கு எந்த இடத்தை தர வேண்டும்? யார் யாரைக் கொண்டு ஆடும் அணியை அமைக்க வேண்டும்? என்பது போன்ற கருத்துகள் கடல்போல் முன்னாள் வீரர்களிடம் இருந்து வந்தது.

இப்படியான முன்னாள் வீரர்களின் கருத்துகளில் மூன்று முன்னாள் வீரர்களின் கருத்துகள் மிக முக்கியமாக பார்க்கப்பட்டது. ஒன்று முன்னாள் தேர்வு குழு தலைவர் வெங்கசர்கார், அடுத்து முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் தற்போதைய ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பின் தலைவருமான முகமது அசாருதீன், மற்றும் முன்னாள் பிரபல இந்திய வீரர் சுனில் கவாஸ்கர்.

வெங்சர்க்கார் உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி பற்றி கூறும் பொழுது ” நான் டி20 உலக கோப்பை இந்திய அணியில் முகமது சமி, உம்ரான் மாலிக், சுப்மன் கில் ஆகியோரை தேர்ந்தெடுத்து இருப்பேன். அவர்களுக்கு ஐபிஎல் சீசன் மிக நன்றாக இருந்தது. அவர்களால் டி20 கிரிக்கெட் வடிவத்தில் நீண்ட தூரம் ஓட முடியும் ” என்று கூறியிருந்தார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் இது பற்றி கூறும் பொழுது ” 15 பேர் கொண்ட அணியில் முகமது ஷமி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் இல்லாதது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. தீபக் ஹூடாவுக்குப் பதில் ஸ்ரேயாஸ் ஐயர் ஹர்ஷல் படேலுக்குப் பதில் முகமது சமி சமி எனது தேர்வாக இருந்திருப்பார்கள்” என்று கூறியிருந்தார்.

இவர்களின் இந்தக் கருத்துக்களுக்கு அடுத்து கவாஸ்கர் தனது கருத்தை காட்டமாகப் பதிவு செய்து இருந்தார். இது பற்றி அவர் கூறும் பொழுது ” ஒவ்வொரு அணிக்கும் தேவைப்படும் அதிர்ஷ்டம் இருந்தால் அந்த அணி உலக கோப்பையை வீட்டிற்கு கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன். அணி தேர்ந்தெடுக்கப்பட்டதும் அது நம்முடைய இந்திய அணி நாம் அந்த அணியை கட்டாயம் ஆதரிக்க வேண்டும். தேர்வுகள் மற்றும் புறக்கணிப்புகள் பற்றி நாம் அதிகம் கேள்வி கேட்கக் கூடாது. இது அணிக்கும் அல்லது சில வீரர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும்” என்று கூறியிருக்கிறார்.