2023 ஐபிஎல் தொடரில் தோனி பங்கேற்பாரா மாட்டாரா என்பது குறித்து சுனில் கவாஸ்கரின் கருத்து

0
43
Sunil Gavaskar about MS Dhoni

இந்த ஐ.பி.எல் சீசன் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்களுக்கும், ஐ.பி.எல்-ன் சாம்பியன் அணிகளுக்கும் மோசமான சீசனாகவே அமைந்திருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றில் சென்னை முதல் நான்கு ஆட்டங்களைத் தோற்று, தன்னளவில் மோசமான சாதனையைச் செய்தது என்றால், மும்பை முதல் எட்டு ஆட்டங்களைத் தோற்று, ஒட்டுமொத்த ஐ.பி.எல் தொடரில் மோசமான சாதனையைப் பதிவு செய்தது. தற்பொழுது இரு அணிகளும், புள்ளி பட்டியலின் கடைசி இரு இடங்களைப் பகிர்ந்துகொண்டு, பிளே-ஆப்ஸ் வாய்ப்பிலிருந்து வெளியேறி இருக்கின்றன!

சென்னை அணிக்கு தீபக் சாஹர், ஆடம் மில்னே காயம் பெரிய பின்னடைவாக அமைந்தது என்றால், மும்பை ஏலத்திலேயே சறுக்கியதோடு, மும்பை நட்சத்திர பேட்ஸ்மேன்களின் பேட்டிங் பார்மும் மோசமாய் அமைந்து, எப்பொழுதுமில்லாத வகையில் மும்பை அணி மோசமாய் சரிந்திருக்கிறது.

இந்தச் சூழலில் நேற்று இரு அணிகளும் மும்பையின் வான்கடே மைதானத்தில் மோதிய போட்டி நடந்தது. இதில் ஆடுகளம் பந்துவீச்சிற்குச் சாதகமாக இருக்க, மும்பை பவுலர்கள் சென்னை அணியின் பேட்ஸ்மேன்களை சுருட்டிவீசி, சென்னை அணியை 97 ரன்களுக்குள் மடக்கினார்கள். ஆனால் மகேந்திர சிங் தோனி 33 பந்துகளில் நான்கு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்களோடு 36 ரன்கள் அடித்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளத்தில் அவரது பேட்டிங்கும், ஷாட்ஸ் செலக்சனும், சரியான பவுலர்களை அட்டாக் பண்ணிய விதமும் மிகச்சிறப்பாக இருந்தது. யாராவது ஒரு பேட்ஸ்மேன் கொஞ்சம் நின்று விளையாடியிருந்தாலும், தோனி மும்பைக்கு சவாலான டோட்டலை நிர்ணயித்திருப்பார். ஆனால் துரதிஷ்டவசமாக யாரும் நிலைக்கவில்லை.

இந்த நிலையில் மகேந்திர சிங் தோனியின் சிறப்பான ஆட்டத்தைப் பார்த்த, இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர் வியந்து சில விசயங்களைப் பேசியுள்ளார். அதில் “அவரது ஆட்டத்தைப் பார்த்தால், அவர் எவ்வளவு ஆர்வமாக விளையாடுகிறார், எவ்வளவு உற்சாகமாக விளையாடுகிறார் என்று தெளிவாகத் தெரிகிறது. 8-9 விக்கெட்டுகள் விழுந்துவிட்டால் ஆட்டத்தை விட்டுவிடும் சூழலில், இவர் விக்கெட்டுகளுக்கு நடுவே வேகமாக ஓடுகிறார், ஆட்டத்தின் அடுத்த ஓவரை சந்திக்க ஆர்வமாக விளையாடுகிறார்” என்று கூறியிருந்தார்!