ஆஸ்திரேலியாவில் இந்த இந்திய பேட்ஸ்மேனை ஒன்னும் பண்ண முடியாது – டேல் ஸ்டெயின் நுட்பமான புகழாரம்!

0
1732
Dale Steyn

ஆஸ்திரேலியாவில் இந்த மாதம் துவங்க இருக்கும் டி20 உலகக்கோப்பை 16 அணிகளை வைத்து நடத்தப்படுகிறது. பிரதான சுற்றில் 12 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அடுத்து இறுதிப்போட்டி!

இந்த 12 அணிகள் பங்குபெறும் பிரதான சுற்றுக்கு 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதி நான்கு அணிகளுக்கான போட்டியில் 8 அணிகள் தகுதி சுற்றில் விளையாடுகின்றன. இந்த 8 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இந்த இரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பிரதான சுற்றுக்குள் நுழையும்.

நடப்பு டி20 உலக கோப்பையில் முதலில் தகுதி சுற்று போட்டிகள் அக்டோபர் 16ஆம் தேதி துவங்கி 21 தேதி வரை நடக்கிறது. பிரதான சுற்றின் முதல் போட்டி அக்டோபர் 22ம் தேதி துவங்குகிறது. இதில் நியூசிலாந்து ஆஸ்திரேலிய அணிகள் மோதுகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் அக்டோபர் 23ஆம் தேதி மோதுகிறது. இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த டி20 உலகக் கோப்பையில் எந்த அணிகள் எப்படி செயல்படும்? எந்த அணியில் எந்த வீரர் முக்கியமானவர்? எந்த அணிகள் பலமானது? என்று பலதரப்பட்ட கருத்துக்கள் முன்னாள் வீரர்களிடமிருந்து வந்து கொண்டே இருக்கிறது. இதில் தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பற்றி மிகவும் நுட்பமாக புகழ்ந்து கூறியிருக்கிறார்.

சூரியகுமார் யாதவ் பற்றி டேல் ஸ்டெய்ன் கூறும் பொழுது ” சூரியகுமார் யாதவ் பந்தின் வேகத்தைப் பயன்படுத்தி விளையாடக் கூடிய பேட்ஸ்மேன். மேலும் அவர் ஸ்கொயர் பகுதியின் பின்புறம் விளையாடக் கூடியவர். மெல்போர்ன் மற்றும் பெர்த் ஆடுகளங்களில் பந்து நன்றாக வேகத்துடன் பேட்க்கு வரும். இதனால் மிக எளிதாக பந்தில் வேகத்தைப் பயன்படுத்தி பின்புறமாக எல்லாப் பகுதிகளிலும் விளையாட முடியும். சூரியகுமார் யாதவ் நின்ற இடத்தில் இருந்து பேக் புட்டில் மிக நன்றாக விளையாடக் கூடியவர். பேக் புட் மற்றும் பிரண்ட் புட் இரண்டிலும் சூர்யகுமார் யாதவ் சிறப்பான கவர் டிரைவையும் அடிக்கக் கூடியவர்” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய டேல் ஸ்டெயின் ” இந்த வகையில் பார்த்தால் சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் எல்லா பகுதியிலும் விளையாடக்கூடிய ஆல்ரவுண்ட் பேட்ஸ்மேன். மேலும் ஆஸ்திரேலியாவில் ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். இங்கு பந்துவீச்சாளர்கள் வேகமாக பேட்ஸ்மேனுக்கு நெருக்கமாக வீசும் பொழுது, பேட்ஸ்மேன் இடம் கொடுத்து வலது இடது என எல்லாப் புறங்களிலும் பந்தின் வேகத்தைப் பயன்படுத்தி விளையாடலாம். சூரியகுமார் யாதவ் 360 டிகிரியில் விளையாடக் கூடியவர். அவர் இந்தியாவின் ஏபி டிவில்லியர்ஸ். தற்போது சூர்யகுமார் யாதவ் இருக்கும் சிறப்பான பேட்டிங் பார்மால் நிச்சயம் இந்த டி20 உலக கோப்பையில் கவனிக்கப்படவேண்டிய ஒரு பேட்ஸ்மேன் ஆக இருப்பார்” என்று மிக நுட்பமாக புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.