சச்சின் விராட் ரோஹித்தை தாண்டி சுப்மன் கில் சாதனை!

0
1614
Gill

ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகிறது!

இந்தத் தொடரின் முதல் போட்டி உத்தரப்பிரதேச மாநில லக்னோ நகர மைதானத்தில் தற்போது நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் ருதுராஜ் மற்றும் ரவி பிஷ்னோய் இருவரும் அறிமுகமாகி இருக்கிறார்கள். மழை குறுக்கிட்டதால் இந்தப் போட்டி 40 ஓவர் கொண்ட போட்டியாக நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி கிளாஸன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரது அதிரடி அரைசதங்களால் 40 ஓவருக்கு 249 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களம் கண்ட இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களில் இளம் வீரர் சுப்மன் கில் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனாலும் அவர் ஒரு புதிய இந்தியச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். அதாவது மிகக் குறைந்த ஒரு நாள் போட்டிகளில் முதல் 500 ரன்களை அடித்த இந்தியர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.

இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளில் இரண்டு அரை சதங்களுடன் 205 ரன்கள் குவித்தார். அடுத்து ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதத்துடன் 245 ரன்கள் குவித்தார். மொத்தம் 9 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 499 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது இன்று 3 ரன்கள் எடுத்தது மூலம் இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் முதல் 500 ரன்களை கடந்த இந்திய பேட்ஸ்மேன்கள்:

10 -சுப்மன் கில்
11 -நவ்ஜோத் சிங் சித்து
13 -ஷிகர் தவான்
13 -ஸ்ரேயாஸ் அய்யர்
13 -கேதார் ஜாதவ்