வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் களமிறங்கும் இந்திய அணியின் வலுவான பிளேயிங் லெவன்

0
705
Ind vs Wi

இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி கடந்த ஞாயிறோடு அங்குப் போட்டிகளை முடித்துக்கொண்டு, நேராக அங்கிருந்து வெஸ்ட் இன்டீஸ் பறந்திருக்கிறது.வெஸ்ட் இன்டீஸ் அணியோடு இந்திய அணி முதலில் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்ப்ரிட் பும்ரா, மொகம்மத் ஷமி என ஆறு முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு இருக்கிறது.

ஷிகர் தவான் தலைமையில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, அர்ஷ்தீப் சிங் என பதினாறு பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி வரும் வெள்ளி 22ஆம் தேதி இரவு ஏழு மணிக்குத் தொடங்குகிறது. இதிலிருந்து ஒரு வலிமையான ப்ளேயிங் லெவனைத்தான் இந்தக் கட்டுரை தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.

ஷிகர் தவான்

இந்த லெப்ட்-ஹேன்ட் சீனியர் பேட்ஸ்மேன் இந்த தொடருக்கான கேப்டன் என்பதால், இவர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது உறுதியான ஒன்றுதான். இதற்கு முன் ராகுல் டிராவிட்டை தற்காலிக பயிற்சியாளராகக் கொண்டு இலங்கை சென்று விளையாடிய தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்திருக்கிறார்.

ருதுராஜ் கெய்க்வாட்

கடந்த ஆண்டு இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்து, ஒருநாள் போட்டிகளில் ரோகித்-ஷிகர் தவானுக்கான மூன்றாவது மாற்று துவக்க வீரராக ருதுராஜ்தான் அணியில் இடம்பெற்று வருகிறார். எனவே அதன் தொடர்ச்சியாய் ருதுராஜ் ஷிகல்தவானோடு ஓபனிங்கில் ரைட்-லெப்ட் காம்பினேசன் அமைக்கலாம்.

ஸ்ரேயாஷ் ஐயர்

இது ஒருநாள் போட்டி என்பதால், நம்பர் 3ல் தீபக் ஹூடா, இஷான் கிஷானை விட இவருக்குத்தான் அதிக முன்னுரிமை அளிக்கப்படும். இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் போட்டியில் விராட்கோலி விளையாடாத பொழுது, இவர்தான் நம்பர் 3ல் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சஞ்சு சாம்சன்

இந்த அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பெற எல்லாத் தகுதிகளும் இருக்கக் கூடியவர். டி20 போட்டிகளில் ரோகித்-ராகுலுக்கு மாற்றான மூன்றாவது துவக்க ஆட்டக்காரராக இஷான் கிஷான் தொடர்ந்து அணியில் இடம்பெற்று வருகிறார். இந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு தருவது சரியான ஒன்றாக இருக்கும்.

சூர்யகுமார் யாதவ்

முன்னணி பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையில் இவர் அணியில் இடம்பெறுவது உறுதியான ஒன்று. இவருக்கு இங்கிலாந்து உடனான ஒருநாள் தொடரில் பேட்டிங் ஆர்டரில் வழங்கப்பட்ட நம்பர் 5யே இந்தத் தொடரிலும் வழங்கலாம்.

தீபக் ஹூடா

பேட்டிங்கில் ஆறாவது இடத்திற்கு மட்டுமல்ல, பவுலிங்கில் ஆறாவது ஆப்சனுக்கும், பார்ட் ஆப் ஸ்பின்னரான தீபக் ஹூடா இந்த அணிக்குத் தேவைப்படுகிறார். ஹர்திக் பாண்ட்யா இருந்திருந்தால் அவர் இந்த இந்த ஆப்சனை தந்திருப்பார். அவர் இல்லாததால் தீபக் ஹூடாதான் சரியான தேர்வாக இருக்க முடியும்.

ரவீந்திர ஜடேஜா

இந்த அணிக்குத் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்திய வொய்ட்-பால் கிரிக்கெட் அணியில் ஏழாமிடம் ஜடேஜாவுக்கானது. அவர் உடற்தகுதியோடு இருந்தால் அவர்தான் இந்த இடத்திற்கு. இவர் ப்ளேயிங் லெவனில் இடம்பெறுவது உறுதி.

மொகம்மத் சிராஜ்

அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் சிராஜ்தான் அனுபவம் அனுபவம் வாய்ந்த பாஸ்ட் பவுலர். எனவே சிராஜ்தான் இந்த அணியின் பாஸ்ட் பவுலிங் யூனிட்டிற்கு தலைமை வகிப்பார்.

பிரசித் கிருஷ்ணா

சமீபக் காலத்தில் இந்த ஹிட் த டெக் ரைட் ஹேன்ட் பாஸ்ட் பவுலருக்கு அதிக வாய்ப்புகள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தரப்படுகிறது. எனவே இவர் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உண்டு.

யுஸ்வேந்திர சாஹல்

இந்த அணியின் ஸ்பின் யூனிட்டின் கேப்டன் இவர்தான். ப்ளேயிங் லெவனில் உறுதியாய் இடம் பெறுவார்.

ஆவேஷ்கான்

இதுவரை நாம் ப்ளேயிங் லெவனுக்கான ப்ளேயர்ஸில் பத்துப் பேரை பார்த்திருக்கிறோம். பதினோராவது ப்ளேயராக ஒரு பாஸ்ட் பவுலர் தேவை. அணியில் ஆவேஷ் கான், சர்துல் தாகூர், அர்ஷ்தீப் சிங் இருக்கிறார்கள்.

இதில் ஒரு லெப்ட் ஹேன்ட் பாஸ்ட் பவுலர் வேண்டுமென்று அர்ஷ்தீப்பை எடுத்தால், இந்திய அணியின் பேட்டிங் டெப்த் நம்பர் 7னோடு முடிந்துவிடும். ஆவேஷ்கானை எடுத்தாலும் இதேதான்.
பேட்டிங் டெப்த் வேண்டுமென்பதற்காக சர்துல் தாகூரை எடுத்தால், ஹர்திக் பாண்ட்யா இல்லாததால் நான்காவது பாஸ்ட் பவுலர் இல்லாததோடு, சிராஜ்-பிரசித் கிருஷ்ணாவோடு சர்துல் தாகூர் என்பது, இன்டியன் பாஸ்ட்-பவுலிங் யூனிட்டை பலவீனமாக்கும். எனவே ஓரளவு அனுபவமும், ஓரளவு பேட் செய்யும் திறமையும் இருக்கிற ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்!