ஸ்ட்ரைக் ரேட் 278; ரஞ்சி டிராபியில் பேட்டிங் பவுலிங்கில் கலக்கும் இந்தியாவின் சுட்டிக் குழந்தை ரியான் பராக்!

0
2967
Riyan Parag

இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக விளங்கும் உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி தற்போது நடந்து வருகிறது. இந்தத் தொடரின் மூலமாக இந்திய அணிக்குள் பிரவேசிக்க இளம் வீரர்கள் தங்களது முழு உழைப்பையும் கொட்டிக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்!

எலைட் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள அசாம் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் தற்பொழுது ரஞ்சித் தொடரின் போட்டி ஒன்று நடந்து வருகிறது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஹைதராபாத் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பந்து வீச்சிற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் சிறிய அணியான அசாம் அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.

ஆனாலும் கூட பந்துவீச்சில் விட்டுத்தராமல் போராடி மிக நெருக்கத்தில் முதல் இன்னிங்ஸ் ரன் லீடிங்கை பறிகொடுத்தது. ஹைதராபாத் அணி முதல் இன்னிங்சில் 208 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அசாம் அணியில் பந்துவீச்சில் 21 வயதான இளம் வீரர் ரியான் பராக் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதற்கு அடுத்து இரண்டாவது பேட் செய்ய வந்த அசாம் அணிக்கு மீண்டும் பேட்டிங்கில் பெரிய சரிவு காத்திருந்தது. ஆனால் இந்த முறை இளம் வீரர் ரியான் பராக் புத்திசாலித்தனமாக அதிரடியில் ஈடுபட்டு ஹைதராபாத் அணியை மிரட்டி விட்டார்.

- Advertisement -

ரியான் பராக் வெறும் 28 பந்துகளை மட்டுமே சந்தித்து 78 ரண்களை குவித்து ஆட்டம் இழந்தார். இதில் எட்டு பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர்கள் அடக்கம். இவரது இந்த அதிரடியான ஆட்டத்தால் அசாம் அணி தற்பொழுது ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் அந்த அணி தாக்கு பிடித்து விளையாடினால் இந்த போட்டியை வெல்லவும் முடியும்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான ரியான் பராக் ஐபிஎல் தொடரில் மிக இளம் வயதில் வந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2019 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இவர் எல்லைக்கோட்டுக்கு அருகில் மிக சர்வ சாதாரணமாக கேட்ச்களை பிடிப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய ஒன்று.

மேலும் இவர் மிகவும் தன்னம்பிக்கையான ஒரு இளைஞர். பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு நான் இந்திய அணியில் இடம் பிடிப்பதோடு மட்டும் நிறுத்த மாட்டேன், மகேந்திர சிங் தோனியை போல இந்திய அணிக்கு மிகச்சிறந்த பினிஷர் ஆகவும் எதிர்காலத்தில் வருவேன் என்று சில மாதங்களுக்கு முன்பு பேசி இருந்தார். அப்பொழுது இணையத்தில் இவர் பலராலும் கேலி செய்யப்பட்டார். ஆனாலும் இந்த இளைஞர் அந்த தன்னம்பிக்கையை மாற்றிக் கொள்ளவே இல்லை. அவரது இந்த தன்னம்பிக்கை தான் இப்படி தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!