2022 சி.எஸ்.கே அணியின் பலம், பலவீனம், பிளேயிங் லெவன் பற்றியான முழு கண்ணோட்டம்

0
93
CSK Team Analysis 2022

தீபக் சாஹர் காயமடைந்திருப்பது, தோனி-பிராவோவின் வயது. அம்பதியின் அச்சுறுத்தும் திடீர் காயம் போன்றவைகள் சி.எஸ்.கே அணிக்குப் பெரிய பின்னடைவாய் அமையுமென்று இர்பான் பதானிலிருந்து ஓரளவு கிரிக்கெட்டை ஆழ்ந்து அணுகி அலசும் இரசிகர்கள் வரை ஆருடமாய் சொல்லி வருகிறார்கள்.

நிச்சயமாய் இவைகளெல்லாம் சி.எஸ்.கே அணிக்குப் பின்னடைவுகளா என்றால் இல்லையென்பதுதான் உண்மை. காரணம் ஏலத்தில் வீரர்கள் வாங்கப்பட்ட விதத்தால் கிடைக்கும் ஃப்ளக்ஸிபிலிட்டி!

- Advertisement -

உதாரணமாய், அடுத்த ஏலத்திற்கு முன்பே விடைபெற வாய்ப்பிருக்கிற கேப்டன் தோனிக்கும், பிராவோவுக்கும் நடந்து முடிந்த ஏலத்திலேயே மாற்றுவீரர்கள் எடுக்கப்பட்டாயிற்று. தோனியின் கீப்பீங் கிளவை அம்பதி-உத்தப்பா-கான்வோ யாராவது பெறுவார்கள். தோனியின் பேட்டிங் இடத்தை சிவம்துபே பெறுவார். பிராவோக்கு ஜோர்டான், ப்ரட்டோரியஸ் என இரு மாற்று வீரர்கள் இருக்கிறார்கள்.

அடுத்து சி.எஸ்.கே அணியின் ஃப்ளக்ஸிபிலிட்டிக்கு இன்னொரு உதாரணம், முதல் ஆட்டத்தில் ருது-மொயீன் ஆடுவது 50/50 வாய்ப்புதான் உள்ளது. ஒருவேளை இவர்கள் ஆடவில்லை என்றாலும் அணி தரம் குறைந்ததாய் அமையாது.

உத்தப்பா-கான்வோ
அம்பதி-ஜடேஜா
சிவம்துபே- தோனி
பிராவோ-சான்ட்னர்
ஹங்கர்கேகர்-மில்னே-முகேஷ்

- Advertisement -

இதில் சான்ட்னர்க்கு பதில் மிஸ்டரி ஆப்ஸ்பின்னர் தீக்சனா வந்தால் பவர்ப்ளேவில் வீசுவார். இல்லை லெக்கி பிரசாந்த் வந்தால், இந்தப்புறம் இந்திய வேகம் முகேஷ் நீக்கப்பட்டு ஜோர்டான் இல்லை ப்ரட்டேரியஸ் வருவார். தீபக்-ருது-மொயீன் என மூன்று முக்கிய வீரர்கள் இல்லாது போனாலும் சி.எஸ்.கே பெரிதாய் தடுமாறாமல் உடனே சுதாரிக்க முடியும். இதில் கான்வோ இல்லாமல் கூட ருது-உத்தப்பாவை வைத்து துவக்கி, ப்ரட்டேரியஸ் இல்லை ஜோர்டானை உள்ளே கொண்டுவர முடியும்.

தொடரின் நடுவில் தீபக் அணிக்குத் திரும்புவதற்கு அதிகபட்ச வாய்ப்பிருக்கிறது. அவர் திரும்பும்போது சி.எஸ்.கே இன்னும் பலமான அணியாக எதிரணிகளுக்குத் தெரியும்.

ருது-கான்வோ
உத்தப்பா-மொயீன்
அம்பதி-ஜடேஜா
தோனி-பிராவோ
தீபக்-ஹங்கர்கேகர்-மில்னே

இதில் மில்னேவுக்குப் பதில் ப்ரட்டேரியஸ் இல்லை ஜோர்டானைக் கொண்டுவந்தால் சிக்ஸ் அடிக்கும் ஹிட்டிங் கெபாசிட்டியோடு நம்பர் 11 வரையும் ஒரு அணி கிடைக்கும். தோனியின் ஆன்-பீல்ட் கேப்டன்சி திறமை சராசரியான பவுலிங் யூனிட்டை கூட எதிரணிக்குத் தலைவலியாய் மாற்றுமென்பதால் இந்த லெவன் அமைந்தால் கூட ஆச்சரிப்பட எதுவுமில்லை.

அடுத்து இந்திய லெக்கி பிரசாந்த், வெளிநாட்டு மிஸ்ட்ரி ஆப்-ஸ்பின்னர் தீக்சனா, லெப்ட்-ஹேன்ட் ஆர்தடாக்ஸ் ஸ்பின்னர் சான்ட்னர் என சைனாமேன் அல்லாமல் மற்ற சுழல் வகைக்கு ஒருவர் பென்ஞ்சில் மட்டுமே இருக்கிறார்கள்.

ஆடுகளம் சுழலுக்குத் சாதகமாய் தெரிந்தாலோ, தொடரின் நடுவில் ஆடுகளம் மெதுவாக மாறினாலோ இந்திய வேகம் ஒருவர் வெளியே அமரவைக்கப்பட்டு கூடுதல் சுழலராக பிரசாந்த் கொண்டுவரப்படலாம். இல்லை மிஸ்டரி தீக்சனா வேண்டுமென்றால் மில்னே, பிராவோ யாராவது வெளியே அனுப்பப்படலாம்.

அடுத்து இந்திய வேகங்களுக்கு மாற்றாய் மோசமில்லாத வகையில், ஆபத்துக்கு ஆடும் லெவனில் தாராளமாய் எடுக்கலாம் என்ற தகுதியோடு துஷார்-ஆசீப்-முகேஷ்-சிமர்ஜீத் என நாலு இந்திய வேகங்கள் பென்ஞ்சில் இருக்கிறார்கள். இதில் முதல் ஆட்டத்தில் இடக்கை வேகம் என்பதாலும், சிலபல நல்ல யார்க்கர்களை வீசுகிறார் என்பதாலும் சிவம்துபேவிற்குப் பதிலாய் முகேஷ் இடம்பெற்றாலும் ஆச்சரியமில்லை. ருது முதல் ஆட்டத்தில் ஆடவில்லையென்றாலும் சிவம்துபேவோடு சேர்த்தே முகேஷ் களம் காணலாம்.

மூன்று பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் வேண்டுமென்று தோனி நினைத்தால் சிவம்துபேவிற்கு இடமில்லை. அதேசமயத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் காயமடைந்தால் சிவம்துபே, சுப்ரன்சு சேனாபதி இருவரும் மாற்று பேட்ஸ்மேன்களாய் இருப்பார்கள்.

இப்படி பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், பாஸ்ட்பவுலர், ஸ்பின்னர் என்று எந்த டிபார்ட்மென்ட்டை எடுத்தாலும் பென்ஞ் ஸ்ட்ரென்த்தே ரொம்ப டீசன்டா சி.எஸ்.கே-க்கு இருக்கு. வீரர்களின் அனுபவமும், அணியில் வீரர்களுக்கான வேலை குறைவு என்பதும், மகியின் கேப்டன்சியும் இப்போது வரை சி.எஸ்.கே வை பலமாகத்தான் காட்டுகிறது!

ருது-மொயின் முதல் போட்டியில் ஆடினால்,

ருது-கான்வோ
உத்தப்பா-மொயீன்
அம்பதி-ஜடேஜா
தோனி-சிவம்துபே (முகேஷ்)
பிராவோ-ஹங்கர்கேகர்-மில்னே என்று மிக வலிமையாகவே நம்பர் 10 வரை பேட்டிங் டெப்த்தோடு, ஆறு பவுலிங் ஆப்சனோடு சென்னை அணி களமிறங்கும்!

கடந்த கால புள்ளி விபரங்கள், கேப்டனாய் மகி இதுவரை தன்னை நிரூபித்திருப்பது, தற்போதைய அணிக்கலவை எல்லாம் வைத்து பார்க்கும் போது நம்பிக்கையான அணியாகவே சி.எஸ்.கே வெளிப்படுகிறது!