தற்போதைய சிறந்த 4 வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்த ஸ்டீவ் ஸ்மித் – ஜோப்ரா ஆர்ச்சர்க்கு இடம் இல்லை

0
4520
Steve Smith and Jofra Archer

தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பேட்டிங் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தான். எந்த நாட்டுக்கு போய் ஆடினாலும், எந்த அணிக்கு எதிராக ஆடினாலும் இவரது பேட்டில் இருந்து மட்டும் ரன்கள் வந்து கொண்டே இருக்கும். டெஸ்ட்டில் கவனமாக ரன் சேர்க்கும் வித்தையானாலும் சரி ஒரு நாள் ஆட்டங்களுக்கு ஏற்ற ஆட்டமானாலும் சரி.. ஸ்மித்தினால் இரண்டையும் செய்ய முடியும். இவரின் வித்தியாசமான ஸ்டேன்ஸ், வித்தியாசமாக பந்தை அடிக்காமல் விடும் முறை என்று எல்லாம் மிக பிரபலம்.

உலகின் எல்லா பவுலருக்கும் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை எடுக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். காரணம் பல ஆண்டுகள் டெஸ்ட் பேட்டிங் வீரர்களுக்கான தரவரிசையில் முதல் இரண்டு இடங்களுக்கு உள்ளேயே நீடிப்பவர் ஸ்மித். அவ்வளவு சிறந்த பேட்டிங் வீரர் ஆன ஸ்மித் தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த நான்கு பந்து வீச்சாளர்களை பட்டியலிட்டுள்ளார்.

Steve Smith Test
Photo Source: Twitter

இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலாவது கூறியுள்ளார் ஸ்மித். பல வேகப்பந்து வீச்சாளர்கள் ஆச்சரியப்படும் விதமாக 39 வயது வரை இன்னமும் சிறப்பாக ஆடி வருபவர் ஆண்டர்சன். நேற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் கூட அனில் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்.

இரண்டாவதாக ஸ்மித் குறிப்பிட்ட வீரர், சக ஆஸ்திரேலிய வீரரான பேட் கம்மின்ஸ். களத்தில் இவரை ஸ்மித் சந்திக்கவில்லை என்றாலும் பயிற்சியில் பல முறை சந்தித்து இருப்பார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பந்து வீச்சாளரான இவர் ஸ்மித்தை அதிக தொந்தரவு செய்திருப்பார் போல.

அடுத்ததாக இந்திய அணியின் பும்ராவைக் கூறியுள்ளார் ஸ்மித். வித்தியாசமான கோணத்தில் பந்து வீசும் பும்ராவை சமாளிக்க முடியாமல், இறுதியாக நடந்த டெஸ்ட் தொடரில் அவரிடம் அவுட் ஆனார் ஸ்மித். தென் ஆப்ரிக்க வீரர் ககிசோ ரபாடாவை நான்காவதாக கூறியுள்ளார் ஸ்மித். 2016, 2018 தொடர் என இரண்டு தொடர் என்று இரண்டு முறையும் ஸ்மித்தை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியுள்ளார் ரபாடா.

ஒரு வலைத்தளத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இந்த பதில்களை ஸ்மித் கூறியுள்ளார். தற்போது முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வரும் ஸ்மித் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பது கடினம் தான். காயம் குணமாகி ஆஷஸ் தொடருக்கு ஸ்மித் ஆட வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.